குழந்தை உரிமைகள் ஆணையம் சார்பில் இளைஞர் நீதி சட்டம் ஆய்வு கூட்டம்: ஆணைய தலைவர், கலெக்டர் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையம் சார்பில் இளைஞர் நீதிச்சட்டம் ஆய்வு கூட்டம், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டம் அரங்கில், நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணையத்தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமை வகித்தார். இதில், ஆணைய உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான இளைஞர் நீதிச்சட்டம், போஸ்கோ சட்டம் பற்றியும் அதனை கூராய்வு செய்வதில் ஆணையத்தின் அதிகாரம் குறித்தும் ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி எடுத்துரைத்தார். தொடர்ந்து ஆணைய உறுப்பினர் இளைஞர் நீதிச்சட்டத்தில் உள்ள சிறார் தொடர்பான பிரிவுகள் குறித்தும் அதில் பல்வேறு துறையினரும் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளித்தனர். துறை சார்ந்த அலுவலர்களும் தங்களது துறை சார்ந்த கேள்விகளை எழுப்பி விளக்கம் பெற்றனர். குழந்தைகள் தொடர்பாக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் உறுப்பினர் அறிவுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்(சுகாதாரம்), தொழிலாளார் நல அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சிறப்பு சிறார் காவல் பிரிவு காவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: