மக்கும் குப்பையில் இருந்து நடப்பு ஆண்டில் 1200 டன் இயற்கை உரம் தயாரிக்க இலக்கு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இதில் 10 மண்டலங்களில் குப்பையை அகற்றும் பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 5 மண்டலங்களில் மாநகராட்சி நேரடியாக இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளில், 19 ஆயிரத்து 618 துாய்மை பணியாளர்கள் மற்றும் 6,117 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த 15 மண்டலங்களிலும் தினமும் 5,600 டன்னுக்கு மேல் குப்பைகள்  சேகரிக்கப்படுகின்றன. அவை கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும்  வளாகங்களில் கொட்டப்பட்டு மலை போல் தேங்கியுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த குப்பை கழிவுகளை குறைக்கவும், குப்பையை  பிரித்து மறுசுழற்சி செய்யவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து தார் தொழிற்சாலைக்கும், ஈர குப்பைகளில் இருந்து இயற்கை  உரம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு கடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்ட தொடரில் ஒப்புதல் வழங்கப்பட்டது. சென்னையில் ஒவ்வொரு நாளும் சுமார் 600 டன் வரை மக்கும் தன்மையுள்ள சமையலறை கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்ற ஈரக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அவை 256 எண்ணிக்கையிலான சிறு அளவிலான நுண்ணுரம் (இயற்கையான உரம்) தயாரிக்கும் மையங்கள் மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள குப்பையை எருவாக்கும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.

  அங்கு கழிவுகள் அனைத்தும் பொடியாக நறுக்கப்பட்டு, பல்வேறு குழிகளில் கொட்டப்படுகிறது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை குப்பையை மக்கச் செய்யும் உயிரி திரவம் அவற்றின் மீது தெளிக்கப்படுகிறது. பின்னர் 40 நாட்களில் கழிவுகள் மக்கி, எருவாக மாறுகிறது. மொத்த கழிவுகளும் எருவாகும்போது, அதன் அளவு 10 சதவீதமாக குறைந்து விடுகிறது.

  பின்னர் அவை பாக்கெட்களில் அடைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் இயற்கை உரமாக விற்கப்படுகிறது. இந்த இயற்கை உரம் விவசாயத்துக்கும், வீடுகளில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படும் செடிகள், தொட்டிகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கு பயன்படும் வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது குறைவான அளவில் தயாரிக்கப்பட்டாலும் அதன்     உற்பத்தியை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

 அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், இயற்கை உரத் தயாரிப்பு சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை உரம், தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது வரை 300 மெட்ரிக் டன் உரம் தமிழ்நாடு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு  லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  இந்த நிதியாண்டில் ஒவ்வொரு மாதமும் 100 மெட்ரிக் டன் என மொத்தம் 1200 மெட்ரிக் டன் உரம் தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

குப்பை இல்லாத நகரம்

கொடுங்கையூர் குப்பை கிடங்கும், ‘பயோ மைனிங்’ முறையில் அகற்றப்பட உள்ளது. தினசரி சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களிலேயே, உரம் தயாரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில், 2,600 டன் குப்பை மக்கும் தன்மை உடையது. இதில், தயாரிக்கப்படும் பசுமை உரத்தை மக்கள் வாங்கி, விவசாய நிலங்கள், வீடுகளில் வளர்க்கும் பூச்செடிகளுக்கு பயன்படத்த தொடங்கினால், கிடங்கிற்கு செல்லும் குப்பையின் அளவு பெரும்பகுதி குறையும். வரும் நாட்களில் உரம் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில், சென்னையை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற முடியும்.

பயோ மைனிங்  

மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‘‘சென்னையில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து 256 உரம் தயாரிக்கும் நிலையங்கள் மூலம் 450 டன் உரம் தயாரிக்கப்படுகிறது. இதைத் தவிர, மறுசுழற்சி செய்ய முடியாத, எரியூட்டக்கூடிய உலர் கழிவுகள், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு வாரந்தோறும் 50 டன் வழங்கப்படுகிறது. மீதமுள்ள குப்பை பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குளில் கொட்டப்படுகின்றன. இதில், பெருங்குடி குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டுள்ள குப்பை, ‘பயோ மைனிங்’ முறையில் அகழ்ந்தெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன,’’ என்றார்.

ரசாயன கலப்பின்றி உற்பத்தி

ரசாயன கலப்பின்றி, மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை, சென்னையை சுற்றியுள்ள, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் தயக்கிமின்றி வாங்கி பலன் அடையலாம். மிக மிக குறைந்த விலையில் விற்கப்படுவதால், விரைவில் விற்பனை அதிகரிக்கும் என சென்னை மாநகராட்சி எதிர்பார்க்கிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தால், உற்பத்தியை அதிகப்படுத்தலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.15க்கு விற்பனை  

மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளின் சென்டர் மீடியனில் வளர்க்கப்படும் செடிகள், மாநகராட்சி பூங்காக்களுக்கும் இந்த இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு விற்கப்படும் இயற்கை உரம் ஒரு பாக்கெட் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. கிடங்குகளில் குப்பை குவியலை குறைக்கும் வகையில் இவ்வாறு குப்பைகளை இயற்கை உரமாக மாற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் குப்பை கிடங்களுக்கு கொண்டு செல்லப்படும் குப்பைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: