2020ல் விடுதி சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: விடுதி சமையலர் பணிக்கு தேர்வானோரின் பட்டியலை வௌியிடவும், தேர்வுக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 29 மாவட்டங்களிலுள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் காலியாகவுள்ள 954 சமையலர் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 14.2.2020ல் வெளியானது. இதில், சென்னை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, நாகப்பட்டினம் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேர்வான 164 பேருக்கு தேர்வுக்குழுவால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

 இதேபோல், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 140 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. மீதமுள்ள 13 மாவட்டங்களில் தேர்வானவர்கள் விபரம் வெளியிடப்படவில்லை. கடந்த 27.11.2021ல் சமையலர் நேரடி நியமன நடைமுறை ரத்து செய்து மாநில அளவிலான தேர்வுக்குழுவின் தலைவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அரசு கூடுதல் பிளீடர் அசோக் ஆகியோர் ஆஜராகினர்.

இதையடுத்து நீதிபதி, ‘‘சில மாவட்டங்களில் பணியில் சேர்ந்துள்ளனர். சில மாவட்டங்களில் தேர்வு நடைமுறை முடிந்துள்ளது. சில மாவட்டங்களில் பட்டியல் வெளியிடவில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக நியமன நடைமுறை மட்டும் ரத்தாகியுள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே, நியமன நடைமுறைகளை ரத்து செய்த தேர்வுக்குழு தலைவரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நியமனத்திற்கு தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். மாணவர்களுக்கு தரமான உணவு கிடைக்க வேண்டுமென்பதில் எந்த மாறுபாடும் இல்லை. எனவே, தேர்வானவர்களின் தகுதி குறித்து தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கலாம். தேவைப்பட்டால் கூடுதல் பயிற்சியும் வழங்கலாம். தேர்வுக்குழுவினர் மீது அரசு முதன்மை செயலர் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: