கல்லூரி விரிவாக்கத்திற்கு ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாக கல்லூரி தாளாளரிடம் ரூ.5.46 கோடி மோசடி போலி பைனான்சியர் உள்பட 3 பேர் கைது

* ஆதிகேசவன் போல் நகை அணிய பவர் ஸ்டாரிடம் பயிற்சி

* கழுத்தில் அணிந்திருந்த 100 சவரன் நகைகள் பறிமுதல்

சென்னை: கல்லூரி விரிவாக்கத்திற்கு ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாக கல்லூரி தாளாளரிடம் ரூ.5.46 கோடி மோசடி செய்த வழக்கில், போலி பைனான்சியர் உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மதுரையில் சேது பொறியியல் கல்லூரி நடத்தி வரும் தாளாளர் முகமது ஜலீல் சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பைனான்சியர் பி.எம்.ரெட்டி என்பவர் அறிமுகமானார். அவர், மதுரையில் உள்ள என் சேது பொறியியல் கல்லூரி விரிவாக்கத்துக்கு ரூ.200 கோடி வாங்கி தருவதாக கூறினார். உடனே பி.எம்.ரெட்டி கடன் வாங்கி தருகிறேன்.

இதற்காக  எனக்கு 2 விழுக்காடு கமிஷன் தர வேண்டும் என்று கூறினார். நானும் 2 விழுக்காடா ரூ.5.46 கோடி பணத்தை கொடுத்தேன். ஆனால் பணம் பெற்ற பி.எம்.ரெட்டி அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரில் சந்தித்து பணம் குறித்து கேட்ட போது, நண்பர்களை வைத்து மிரட்டுகிறார். எனவே என்னிடம் வாங்கிய ரூ.5.46 கோடி பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.எம்.ரெட்டி(எ)முத்துகிருஷ்ணன் தன்னை பைனான்சியராக காட்டி, கல்லூரி தாளாளர் முகமது ஜலீலிடமும் ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாக ரூ.5.46 கோடி பணம் கமிஷன் பெற்று மோசடி செய்ததும் உறுதியானது. அதைதொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட பைனான்சியர் பி.எம்.ரெட்டி மற்றும் இந்த மோசடிக்கு உடைந்தயாக இருந்த அவரது கூட்டாளிகளான சங்கர்(34), இசக்கியேல் ராஜன்(37) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் கழுத்து மற்றும் கைகளில் அணிந்து இருந்த 100 சவரனுக்கு மேல் தங்க நகைகள் மற்றும் போலி ஆவணங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் போலி பைனான்சியர் பி.எம்.ரெட்டி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: எனது பெயர் முத்துகிருஷ்ணன். குறுகிய காலத்தில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று எனது ஆசை. இதனால் நான் வடசென்னையில் வசித்து வந்த ஆதிகேசவன் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தேன். ஆதிகேசவன் குறுகிய காலத்தில் பல கோடிகளுக்கு அதிபதியாக வளர்ந்தவர். பெரிய பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தவர். தனிக்கட்சியும் நடத்தியவர். நானும் ஒரு நாள் ஆதிகேசவன் போல் வரவேண்டும் என்று அவரது நண்பர்களுடன் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

இதற்கிடையே கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த டாக்டர் சீனிவாசன் (எ)பவர் ஸ்டார் சீனிவாசனுடன் நட்பு கிடைத்தது. இந்த நட்பு ஆதிகேவசன் நண்பர்கள் மூலம் எனக்கு கிடைத்தது. பவர் ஸ்டார் ஆதிகேவசன் போல், பெரிய தொழிலதிபர்களுக்கு பல கோடி ரூபாய் கடன் வாங்கி கொடுத்து வந்தார். இதனால் நான் பவர் ஸ்டாருடன் நெருங்கி பழகி, அவர் எப்படி மோசடிகள் செய்கிறார் என்று 2 மாதங்கள் அவருடன் நெருங்கி பழகி தொழிலை கற்றுக்கொண்டேன்.

பிற்காலத்தில் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள தொழிலதிபர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக மோசடி வழக்கில் டெல்லி போலீசார் அவரை கைது செய்தனர்.

அதேநேரம் ஆதிகேவசன் இறப்புக்கு பிறகு நான், வில்லிவாக்கத்தில் பெரிய அளவில் பைனான்சியர் போலவும், ஆதிகேவன் போல் கழுத்தில் மற்றும் கைகளில் தங்க நகைகளை அணிந்து கொண்டு தனக்கு என தனி வழியை ஏற்படுத்திக்கொண்டேன். அப்போது நான் பவர் ஸ்டாரிடம் மோசடி ெசய்வது எப்படி என்று கற்றுக்கொண்டதை அப்படியே ஆதிகேவசன் உடன் பணியாற்றி வந்த நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டும், விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பரக 100 சவரனுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு தொழிலதிபர்களிடம், வங்கியில் மற்றும் பெரிய பைனான்சியர்களிடம் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்தேன். இதற்காக முத்துகிருஷ்ணன் என்ற பெயரை நான் பி.எம்.ரெட்டி, மற்றும் முத்து, லையன் முத்துவேல் என்ற பல பெயர்களில் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததேன்.

அந்த வகையில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி கொடுப்பதற்கு முன்பே தனக்கு வேண்டிய கமிஷன் தொகையை பெற்றுவிடுவேன். பிறகு சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் பணம் கேட்டால் அவர்களை நான் எனது அடியாட்களை வைத்து மிரட்டியும், அவர்களிடம் வெற்று பேப்பரில் வங்கி வைத்திருந்த கையெழுத்தை காட்டி மிரட்டி ஏமாற்றி வந்தேன். அந்த வகையில் ரூ.100 கோடி வரை பலரிடம் ஏமாற்றியுள்ளேன். நான் ஆதிகேவசன் போல் வர வேண்டும் என்று நினைத்தும், பவர் ஸ்டாரிடம் தொழில் கற்றுக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தேன். கடைசியில் நான் கல்லூரி தாளாளர் முகமது ஜலீலிடம் ரூ.5.46 கோடி ஏமாற்றிய வழக்கில் வசமாக மாட்டிக்கொண்டேன்.

இவ்வாறு கைது ெசய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: