படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு மாணவர்கள் வளரவேண்டும்: அமைச்சர் பொன்முடி அறிவுரை

சென்னை: மாணவர்கள் படிக்கும் காலத்தில் சமூக, அரசியல் உணர்வோடு வளர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி அறிவுரை வழங்கினார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. சிறப்பு விருந்தினாராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசுகையில், ‘‘மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள சிற்றுண்டி வசதி கொஞ்சம் சேதமாகியுள்ளது என மாணவர்கள் என்னிடம் இங்கு வந்தவுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதை வெகுவிரைவில் சரி செய்து கொடுக்கப்படும்’’ என்றார்.

தொடர்ந்து தயாநிதி மாறன் எம்பி கூறியதாவது: மாணவர்கள், மாணவிகள் இணைந்து படிக்கும் சென்னையின் முதல் கல்லூரி மாநிலக் கல்லூரி தான். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்திற்கு பல அரசியல் தலைவர்களை இந்த கல்லூரி கொடுத்துள்ளது. கல்வியில் மதச்சாயத்தை சிலர் பூசிக்கொண்டிருக்கும் வேளையில் கல்விதான் மனிதனின் நிலையான சொத்து என நம் முதல்வர் கூறிவருகிறார். கல்வி சொத்தை யாராலும் திருட முடியாது. படிப்பிற்கு அடுத்தபடியான வேலைவாய்ப்பு தமிழ்நாட்டிலேயே கிடைக்கும் வகையில் முதல்வர் நேற்று பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்என்றார்.

பின்னர் அமைச்சர் பொன்முடி பேசும்போது, ‘‘ நான் முதல்வன், கல்லூரிக் கனவு உள்ளிட்ட உயர்கல்வி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் சமுதாயம் மற்றும் அரசியல் பற்றியும் படிக்க வேண்டும். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, முதல்வரின் உங்களில் ஒருவன் உள்ளிட்ட புத்தகங்களை படித்தாலே தமிழ்நாட்டின் வரலாறு, சமூக அமைப்பு, அரசியல் பற்றிய புரிதல் கிடைக்கும். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே சமூக, அரசியல் உணர்வோடு வளர வேண்டும் ’’ என்றார்.

Related Stories: