தற்காலிக ஆசிரியர்கள் நியமன தடையை நீக்க கோரி முறையீடு: 8ம் தேதி விசாரணை

மதுரை: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கான தடையை நீக்கக் கோரி அரசுத் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்க தலைவர் ஷீலா பிரேம்குமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தார். இந்நிலையில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையால், ஐகோர்ட் கிளைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியவில்லை. உரிய விதிமுறைகளை பின்பற்றி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தடையால் நியமன நடைமுறைகள் பாதித்துள்ளன. எனவே இந்த தடையை நீக்க வேண்டும். இதற்கான அரசுத் தரப்பு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதி, ‘‘நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதே சரியாக இருக்கும். தற்காலிகமாக நியமிப்பது சரியல்ல. இந்த விஷயத்தில் ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்? இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை. மனுவை வழக்கமாக விசாரணைக்கு பட்டியலிட்ட 8ம் தேதியே விசாரிக்கலாம்’’ என அறிவுறுத்தினார்.

Related Stories: