ரூட் - பேர்ஸ்டோ அபார ஆட்டம் இமாலய இலக்கை விரட்டி இங்கிலாந்து அணி சாதனை: தொடரை சமன் செய்து அசத்தல்

பர்மிங்காம்: இந்திய அணியுடனான 5வது டெஸ்ட் போட்டியில், ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோ ஜோடியின் அபார ஆட்டத்தால் 378 ரன் என்ற இமாலய இலக்கை விரட்டி சாதனை படைத்த இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்ற நிலையில், வீரர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து 5வது மற்றும் கடைசி டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் மோதியது. பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச... இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்தது. பன்ட் 146, ஜடேஜா 104, கேப்டன் பும்ரா 31 ரன் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட் அள்ளினார்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோ 106, பில்லிங்ஸ் 36, ரூட் 31, கேப்டன் ஸ்டோக்ஸ் 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2, ஷர்துல் 1 விக்கெட் வீழ்த்தினர். 132 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 81.5 ஓவரில் 245 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. புஜாரா 66 ரன், பன்ட் 57, ஜடேஜா 23 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஏமாற்றமளித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 4, பிராடு, பாட்ஸ் தலா 2, ஆண்டர்சன், லீச் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, 378 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. லீஸ் - கிராவ்லி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தாலும், இங்கிலாந்து 109 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்ததால் இந்திய அணியின் கை ஓங்கியது. இந்த நிலையில், ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோ இணைந்து கடுமையாகப் போராடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்திருந்தது. கை வசம் 7 விக்கெட் இருக்க, வெற்றிக்கு இன்னும் 119 ரன் தேவை என்ற நிலையில் ரூட் 76 ரன், பேர்ஸ்டோ 72 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

இவர்களைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட எந்த வியூகமும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அசத்தினர். இங்கிலாந்து 76.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன் எடுத்து சாதனை வெற்றியை வசப்படுத்தியது. ரூட் 142 ரன் (173 பந்து, 19 பவுண்டரி, 1 சிக்சர்), பேர்ஸ்டோ 114 ரன்னுடன் (145 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய பேர்ஸ்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்திய தரப்பில் பும்ரா (23 விக்கெட்), இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் (737 ரன், சராசரி 105.28) தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றனர். கடைசி டெஸ்டில் 3 நாட்களுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் சொதப்பியதால் வெற்றி வாய்ப்பை வீணடித்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அடுத்து இரு அணிகளும் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளன. முதல் டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நாளை நடக்க உள்ளது.

* ரூட் 28வது சதம்

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நேற்று தனது 28வது டெஸ்ட் சதத்தை விளாசினார். தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில், அதிக சதம் விளாசிய வீரராக ரூட் முதல் இடத்தில்  இருக்கிறார்.

எண்    வீரர்    டெஸ்ட்    சதம்

1. ஜோரூட்(இங்கிலாந்து)    121    28

2. ஸ்டீவன் ஸ்மித்(ஆஸ்திரேலியா)    86    27

3. விராத் கோஹ்லி(இந்தியா)    102    27

4. கேன் வில்லியம்சன்(நியூசிலாந்து)    88    24

5. டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா)    95    24

* ஜானி பேர்ஸ்டோ கடைசி  5 இன்னிங்சில் 136, 162, 71*, 106, 114* ரன் குவித்துள்ளார்.

* 93 ஆண்டு சாதனை தகர்ப்பு: ரூட் - பேர்ஸ்டோ ஜோடி 4வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 269 ரன் குவித்து சாதன படைத்துள்ளனர். முன்னதாக, 1939ல் இங்கிலாந்தின் வாலி ஹம்மாண்டு - எட்டி பெயின்டர் இணை  தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 164 ரன் குவித்ததே 4வது விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

Related Stories: