இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை தமிழர்கள், தமிழகத்திற்கு படகுகள் மூலம் வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை 101 பேர் வந்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை சேர்ந்த 3 குடும்பத்தினர் தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு படகில் வந்தனர்.

தகவலறிந்து அரிச்சல்முனை வந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார், 8 பேரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

இதில், அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த கமலா ராணி (43), இவரது 19, 14 வயது மகன்கள் மற்றும் 9 வயது மகள், இதே பகுதியை சேர்ந்த லவேந்திரன் (25), இவரது மனைவி சசிகலா (24), இவர்களது ஒன்றரை வயது மகன் மற்றும் வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த விஜயகாந்த் (33) என்பது தெரிய வந்தது. பின்னர் அனைவரும் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் கூறுகையில், ‘‘இலங்கையில் கூலி வேலை கூட கிடைக்கவில்லை. வருமானமின்றி கஷ்டப்பட்டதால் இங்கு வந்துள்ளோம். இதற்காக படகோட்டிகளிடம் இலங்கை பணம் ரூ.5 லட்சம் கொடுத்தோம்’’ என்றனர்.

Related Stories: