நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்

நெல்லை: திருநங்கைகள் குறைதீர்க்கும் முதல் கூட்டம் நெல்லை  கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நேற்று நடந்தது.  கூட்டத்தில் திருநங்கைகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டத்தில் நெல்லை மாநகர  போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பேசுகையில், ‘‘பாளையங்கோட்டை போலீஸ்  ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாகவும், ஊர்க்காவல்  படையில் வேலை வாய்ப்பு அளிப்பது தொடர்பாகவும், மாநகர போலீஸ் கமிஷனருடன்  கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை  முன்னேற்றுவதற்காகவும், சிறந்த குடிமகளாக திகழவும், அனைத்து முயற்சிகளும்  மேற்கொள்ளப்படும்.’’ என்றார். கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசுகையில்,  ‘‘ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாக  முகாம் நடத்தி கலந்தாய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள்,  முதுகலை பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பான சாத்தியக்  கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். ’’ என்றார். பின்னர் கலெக்டர் விஷ்ணு அளித்த பேட்டியில், ‘‘ திருநங்கைகளுக்கு முதன் முறையாக  குறை தீர்க்கும் நாள்  கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அவர்களது இருப்பிடத்திற்கே  சென்று குரூப்-2  மற்றும் குரூப்-4  டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு 3 மாதங்களாக   பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது பெயர்களை அரசு கெசட்டில்   மாற்றுவதற்காக சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்தனர். அதற்காக   சிறப்பு அனுமதி பெற்று, அவர்கள் பகுதியில் முகாம் நடத்தி மனுக்கள் பெற்று   பெயர் மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்று   திருநங்கைகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்.’’ என்றார்.

Related Stories: