பால் தயிர் ஆனாலும்; தயிர் மோர் ஆனாலும்... ஒரே நாடு; ஒரே அடி: மக்களை கசக்கி பிழியும் ஜிஎஸ்டி; பிறந்தாலும் வரி, செத்தாலும் வரி

‘டாக்ஸ்’ (வரி) என்ற சொல், லத்தீன் சொல்லான ‘டாக்ஸோ’ என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள், ‘நான் மதிப்பிடுகிறேன்’ என்பதாகும். நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனிடம் இருந்து அரசு நேரடி, மறைமுக வரி வசூலித்து வருகிறது. நேரடி வரி என்பது குடிமக்களே அரசாங்கத்திற்கு செலுத்தக்கூடிய தொழில் வரி, வருமான வரி, சொத்துவரி உள்ளிட்டவை. மறைமுக வரி என்பது குடிமக்கள் நேரடியாக அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமல், மக்கள் வாங்கும் பொருள்களுக்கும், பெரும் சேவைகளுக்கும் வர்த்தகர்களால் மக்களிடம் வரிவசூல் செய்யப்பட்டு, அதை வர்த்தகர்கள் ஒன்றிய, மாநில அரசுகளிடம் செலுத்துவதாகும். கலால் வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி போன்றவை மறைமுக வரிகளாக இருந்தன.

இதை தடுக்க ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முழக்கத்தை கையில் எடுத்தது ஒன்றிய அரசு. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்று புதிதாக கொண்டு வந்த சீர்திருத்தம்தான் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி). ஜூலை 1, 2017 நள்ளிரவு தலைநகர் டெல்லியே பரபரப்பாக காணப்பட்டது. நாடாளுமன்ற கட்டிடங்கள் மின்னொளியில் ஜொலித்தது. ஒரு புதிய சீர்திருத்தத்தை அமல்படுத்த நள்ளிரவில் நாடாளுமன்ற கூட்டப்பட்டதில்லை. சுமார் 70 ஆண்டுக்குப்பின் புதிய வரிமுறை விதிக்கப்படுவதால், நாடாளுமன்ற மைய கட்டிடத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு நடந்த விழாவில், நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு நள்ளிரவு 12 மணிக்கு மணியடித்து அமல்படுத்தப்பட்டது.

* விலை ஏற்றம் மட்டும்தான்

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் சரக்கு மற்றும் சேவை வரிகள் குறைக்கப்படும் என்று கூறப்பட்டது. சரியாக 5 ஆண்டுகள் முடிந்தும் எதுவும் நடக்கவில்லை. ஆனால், மாறாக ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதங்கள் அதிகப்பட்சமாக உயர்த்தப்பட்டது. மூல பொருட்களின் வரியும் உயர்த்தப்பட்டன. இதனால், நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள், உடுத்தும் ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்துக்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கும்போது ஏழை, எளிய மக்களின் தொழில்களை பாதிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டே வருகிறது. இதனால் சிறு, குறு தொழில்கள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* உணவுக்கு கையேந்தும் நிலை

வயிற்றை நிரப்ப சாலையோரத்தில் சிறியதாக பெட்டி கடை போட்டு பிழைப்பு நடத்தி வரும் அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துள்ளது ஜிஎஸ்டி. அவர்களால் விற்கப்படும் கடலைமிட்டாய், பிஸ்கட் உள்ளிட்ட பல பொருட்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பால், விலை அதிகரித்துள்ளது. இதனால், அவர்கள் சிறிய தொகையை முதலீடு செய்யாமல் உணவுக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பூவிலிருந்து வண்டு தேனை எடுக்கும்போது, பூவுக்கும் வலிக்காமல் வண்டும் கீழே விழுந்துவிடாமல் எத்தனை லாவகத்துடன் தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அதுபோன்று, ஓர் அரசு மக்களிடம் வரி வசூல் செய்யும்போது நடந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் தனது அடிப்படையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே மிகுந்த சிரமப்படக்கூடிய இன்றைய கடினமான சூழலில், வரி வசூல் முறையில் சில சலுகைகளை மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றனர்.

* பணக்காரர்களுக்கு சலுகை

இந்தியாவின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் வாழும் மக்களை ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். பெரும் பணக்காரர்கள், பணக்காரர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள், பெரும் ஏழைகள். இவர்கள் அனைவரின் வாழ்வாதாரத்திலும் ஜிஎஸ்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இருக்கிறவங்க கிட்ட வாங்க முடியும். ஆனால், இந்த ஜிஎஸ்டி வரி முறை மாறாக உள்ளது. பெரும் தொழிலதிபர்கள், பணக்காரர்களின் தொழில்களுக்கு குறைந்த வரி விகிதமும், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தொழில்களுக்கு அதிகப்பட்ச வரி விகிதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, ஏழையாகவே இருக்கிறான். கோடீஸ்வரன், கோடீஸ்வரனாகவே இருக்கிறான். எனவே, அரசு காலம் அறிந்து, குடிமக்களின் நிலை அறிந்து வரிவசூல் செய்வது அவசியம்.

* பயன் அளிக்காத ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதால் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே லாபத்தை கண்டுள்ளன. சில்லறை விற்பனை நிறுவனங்கள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் விற்பனையில் கடும் சரிவையே சந்தித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி முறை கொண்டு வரப்பட்டால் நாடு முழுவதும் ஒரே சீரான வரி விகிதமும், பொருளுக்கான விலையும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே சீரான விலையில் இருக்கும் என்றும், இதன் முழு பயனையும் நுகர்வோர் அடையமுடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு. வாட் வரி விதிப்பு முறையில் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி முறையில் 18 சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் என அதிகபட்ச வரி விதிக்கப்பட்டதால் தங்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதாக சிறு தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

* மருத்துவமனை அறைக்கு வரி

சமீபத்தில் சண்டிகரில் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான நிதியமைச்சர்கள் குழு, இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் பிறப்பு (மருத்துவமனையில் கர்ப்பிணிகள் அனுமதிக்கப்படும் அறைகளின் வாடகைக்கு வரி) முதல் சுடுகாடு வரை ஒரே நாடு, ஒரே அடியாக வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேக்கிங் செய்யப்படாத பிராண்ட் அல்லாத உணவு பொருட்களுக்கு இருந்த வரி விலக்கை திரும்பப் பெற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காசோலை, அஞ்சலக சேவைகள், மருத்துவமனை அறை வாடகைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000க்கு கீழ் உள்ள ஓட்டல் அறை 12% வரி அறிமுக செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.999க்கு அறை வாடகை எடுத்தால், ரூ.120 வரி செலுத்த வேண்டும். கோடீஸ்வர்கள் தங்கு அறைக்கும் ஒரே வரி, ஏழை, எளிய மக்கள் தங்கும் ரூ.999 அறைக்கும் ஒரே வரி.

* தயிர், மோருக்கும் வேட்டு

அச்சிடுவது, எழுதுவது அல்லது வரைவதற்கு பயன்படுத்தப்படும் மைகள், கத்தி, பேப்பர் கத்தி, பென்சில் ஷார்ப்னர், முட்டைகளை சுத்தம் செய்வது, வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், எல்இடி லைட்கள், பட்டிகள், மின்னணு சர்க்கியூட்கள், வரைவதற்கான கருவிகள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.வங்கி காசோலைகளுக்கு வரி 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. லேபிளுடன் பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அப்பளம், பன்னீர், தயிர், மோர், தேன், இறைச்சி, உலர் காய்கறிகள், பொறி, தாமரை விதை, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள் போன்றவற்றுக்கு வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டு, 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

* பம்புசெட்டுகளும் தப்பவில்லை

மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5,000க்கு மேல் உள்ள அறைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் செயற்கை உறுப்புகள், உபகரணங்கள் போன்றவற்றுக்கு வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே தங்கம், நகைகள் மற்றும் நவரத்தின கற்கள் அனுப்புவதில் மோசடியை தடுக்கும் வகையில், குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் ‘இவே’ பில் கட்டாயம் ஆக்குவது பற்றி மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இருப்பினும், இந்த உச்ச வரம்பு மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கலாம். சாலை, பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மயான கட்டுமானம் போன்ற ஒப்பந்தங்களுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. பம்புசெட்டுகள், பால் இயந்திரங்கள், கிரைண்டர்களுக்கு 18% வரி உயர்த்தப்பட்டுள்ளது.

* வளர்ச்சியடையுமா?

இவ்வாறு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களுக்கும், சிறு மற்றும் குறு தொழில்கள் நடத்தும் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு மாற்றங்களால் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறும். விவசாயம், சிறு மற்றும் குறு தொழில்கள் முடங்கும். பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கனவே, கொரோனா தொற்றால் பொருளாதாரம் கடுமையான சரிவை கண்டு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்று காணாத சரிவை கண்டு வருகிறது.

தற்போது செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றங்கள் வரும் 18ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டால், பொருளாதாரம் மேலும் சரிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இயந்திரங்கள் தொழிலை நம்பி கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. ‘மக்களுக்காக தான் அரசு... அரசுக்காக மக்கள் இல்லை...’ இதை மக்களை ஆளும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டில் உள்ளது விவசாயியும், மக்களும் வறுமை கோட்டிற்கு கீழ் இல்லாமல், பசி பட்டினி இல்லாமல் எப்போது வாழ்கிறார்களோ அப்போதுதான் அந்த நாடு வளர்ச்சியடைந்த என பெருமை கொள்ளலாம். வரி வசூல் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவது வரும் தலைமுறையினர் பஞ்சத்துக்கு தள்ள நேரிடும்.   

* ஜிஎஸ்டியின் 4 விகிதங்கள்

பொருள்கள் மற்றும் சேவைகளின் தன்மை அடிப்படையில் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டியின் 3 வகைகள்

நாடு முழுவதும் 3 வகைகளில் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது.

* ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி)

* மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின் ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி, யூடிஜிஎஸ்டி)

* ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி)

* எவ்வளவு வரிதான் வாங்குவாங்க...

உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்டவை ஜிஎஸ்டியுடன் சேவை கட்டணம் வசூலிப்பது குறித்து புகார்கள் வந்ததையடுத்து வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது. அது, நுகர்வோர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்று ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை யாராவது மீறினால் இது குறித்து 1915 என்ற எண்ணை அழைத்தோ அல்லது என்சிஎச் என்ற செயலி மூலமாக நுகர்வோர் ஹெல்ப்லைனில் புகார் அளிக்கலாம் என்று கூறி உள்ளது. ஆனால், ஓட்டல்கள் மீது நேரடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது, குழம்பிய குட்டையில் நழுவும் மீன் கதையாக உள்ளது.    

* வருமான அடிப்படையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுமா?

ஜிஎஸ்டி கவுன்சில் அவ்வப்போது கூடி பொருள்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்கிறது. ஆனால், தனிநபர் வருமான வரி விதிப்பு போல ஜிஎஸ்டி வரிவிதிப்பும் வருமான அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் இருந்தால் சிறப்பானதாக இருக்கும். இது, பொருளாதார சமத்துவத்தின் அடிப்படைப் புள்ளியாகவும் அமையும். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தொழிலதிபரும் சரி, தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்களும் சரி, கடைகளில் விற்கப்படும் அரிசி, பிஸ்கட், தண்ணீர் என அனைத்தும் ஒரே விலை கொடுத்துதான் வாங்குகின்றனர். அவரவர் வருமானத்திற்கு ஏற்ற வகையில் பொருள்களின் மீதான வரி இருக்காது. ஆனால், அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் வரி செலுத்துவார்கள். நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சமமான பொருளாதார நிலையில் இல்லாதபோது, ஒரே மாதிரியான வரி என்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, பொருள்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தொடர்ந்து விதிக்கப்படாமல், மக்களின் பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்து விதிக்கப்படுவது சமூகத்திற்கு நன்மை தரும்.

* தண்ணீருக்கு கட்டணம் பரிதவிக்கும் விவசாயிகள்

வீடுகளில்  மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வரும் அனைவரும் வரும்  30.922க்குள் ரூ.10,000 செலுத்தி ஒன்றிய நிலத்தடி நீர் ஆணையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இல்லாவிடில் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று ஜல்சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த பத்தாயிரம் ரூபாய் என்பது தடையில்லா சான்றிதழுக்கு மட்டும்தான். ஆனால் பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு தனியாக தொகை வசூலிக்கப்படுகிறது.  எடுக்கப்படும் தண்ணீருக்கு ஒவ்வொரு பகுதிக்கும் தகுந்தாற்போல ஒவ்வொரு  தொழிலுக்கும் மற்றும் குடியிருப்புகளுக்கு தகுந்தாற்போல் லிட்டருக்கு என்ன விலை என்று நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது. உதாரணமாக அடுக்குமாடி  குடியிருப்புகளுக்கு சில பகுதிகளுக்கு தோராயமாக ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் என கணக்கிட்டு இருக்கிறார்கள்.

இதுதொடர்பான முழு விவரங்கள் ஜல்சக்தி அமைச்சகத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி தண்ணீருக்கும் காசு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஒவ்வொரு குடிமகனும் தள்ளப்பட்டுள்ளனர். ஜல்சக்தி துறையின் இந்த உத்தரவுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயம் பெரும்பாலும் நிலத்தடி நீரை நம்பியே உள்ளது. ஜல்சக்தி இந்த உத்தரவால், எந்த லாபமும் இன்றி ஊரார் பசியையாற்றும் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு  தள்ளப்பட்டுள்ளனர். ஒரு பக்கம் பம்புசெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் தண்ணீருக்கு கட்டணம் வசூலிப்பு.  இதனால், விவசாய பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீடு வராததால் பொருளாதார நெருக்கடியை நோக்கி புதுச்சேரி மாநிலம்

ஜிஎஸ்டி.யை 2017ல் அமல்படுத்திய பிறகு, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக ஒன்றிய அரசு உறுதி அளித்தது. இந்த மாதத்துடன் இந்த 5 ஆண்டு முடிந்து விட்டது. ஆனால், நிதிப்  பற்றாக்குறை உள்ளதாலும், முக்கிய வருவாய் ஆதாரங்கள் பறிபோனதாலும் இழப்பீடு காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு மாநிலங்கள், குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், ஒன்றிய அரசிடமிருந்து ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1,300 கோடி வரவில்லை என்றால் புதுச்சேரியில் பொருளாதார நெருக்கடியை பிரகடனப்படுத்தும் நிலை ஏற்படும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை தராமல் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தொடர்ந்து கேட்டபின்பு தான் தருகிறது.

உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்

* உலகில் உள்ள 140 நாடுகளில் இந்தியாவில்தான் ஜிஎஸ்டி வரி அதிகம் வசூலிக்கப்படுகிறது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

* உலகிலேயே ஜிஎஸ்டி வரி முறையை அறிமுகப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் தான். கடந்த 1954ம் ஆண்டிலேயே பிரான்சில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகப்படியான விற்பனை வரி, மோசடி மற்றும் கடத்தலை ஊக்குவிக்கும் கட்டணங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் 20% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

* ஐரோப்பிய நாடுகளில் 1970 முதல் 80ம் ஆண்டுகளில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது.

* பிரேசில் நாட்டில் 4 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

* பிரிட்டனில் 20 சதவிகிதமும், கனடா நாட்டில் 13 முதல் 15 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது.

* நியூசிலாந்து நாட்டில் கடந்த 1986ம் ஆண்டு 10 சதவிகித வரியுடன் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், 1989ம் ஆண்டில் 12.5 சதவிகிதமாகவும், 2010ஆம் ஆண்டில் 15 சதவிகிதமாகவும் இந்த வரி உயர்த்தப்பட்டது.

* சீனாவில் வணிக வரி முறையை மாற்றி வாட் வரி அமைப்பைக் கடந்த 2016ம் ஆண்டு சீனா கொண்டு வந்தது. வாட் வரி முறை மூலம் அந்நாட்டின் கட்டுமானத்துறை பாதிக்கப்பட்டது. சீனாவில், ஒரு சில பொருட்களுக்குப் பகுதி ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது.

* ஆஸ்திரேலியாவில் கடந்த 2000ம் ஆண்டு ஜி.எஸ்.டி 10 சதவீதத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேவேளையில், உணவு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு ஜீரோ வரி விதிக்கப்பட்டது.

* மலேசியா கடந்த 2015ம் ஆண்டில் மலேசியாவில் ஜி.எஸ்.டி அறிமுகமாகியது. 6% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் 7 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: