×

அறிகுறி இல்லாத கொரோனாவை உணர முடியாதா?!

நன்றி குங்குமம் டாக்டர்

அட்டென்ஷன் ப்ளீஸ்


அறிகுறி இல்லாத கொரோனா பற்றி பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இதை உணர்வதற்கு வழிகள் ஏதேனும் இல்லையா என்று நுரையீரல் நோய்த்தொற்று மருத்துவர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்...

‘‘இருமல், சளி, காய்ச்சல் போன்றவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. ஆனால், இந்த அறிகுறிகள் இல்லாத பாதிப்பையே Asymptomatic corona என்கிறோம். அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாகி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அவர்களிடமிருந்து மற்றவர்களும் தள்ளி இருக்கலாம். ஆனால், அறிகுறி இல்லாத சூழலில் என்ன செய்வது என்பதே பலருக்கும் இப்போது குழப்பமாக இருக்கிறது.

Asymptomatic வகையையும் உணர்ந்துகொள்ள முடியும். உடல் அசதி, சோர்வு, தொண்டை கரகரப்பு, வாசனை இழப்பு, தொண்டை வலி ஆகியவை உடலில் 2 அல்லது 3 நாட்களுக்குக் காணப்படும். சிலருக்கு உடல் வெப்பநிலையிலும் மாற்றம் தென்படலாம். எந்த மருந்து, மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளாமலே இத்தகைய பாதிப்புகள் குணமாகும் வாய்ப்பும் உண்டு. இந்த உடல் மாற்றங்களை உணர்ந்தால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதோடு, மருத்து வரிடம் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.

கொரோனா பற்றிய விழிப்புணர்வு எல்லோரிடமும் உள்ளது. ஆனாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவர மேற்கொள்வது இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அதனால், பொதுமக்களாகிய நாம்தான் இந்நோயைப் பரப்புகிறோம் என்பதையும் உணர வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இருந்தால், அறிகுறியற்ற கொரோனா ஆபத்து விளைவிக்காது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

அதனால் 6 மணி முதல் 8 மணி வரை நல்ல தூக்கம் தேவை. ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். வெந்நீர் அடிக்கடி குடிக்க வேண்டும். மாஸ்க் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை சலிக்காமல் பின்பற்ற வேண்டும். காரம், மசாலா, புளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தொண்டை வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி நல்ல பலனைக் கொடுக்கும். அடிக்கடி வெளியே போவதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் யாருக்காவது பாஸிட்டிவ் இருந்தால், மற்றவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என்கிறார்.

- விஜயகுமார்

Asymptomatic... ஒரு வினோத ஆராய்ச்சி!

கொரோனா தொடர்பான பல ஆய்வுகள் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் அறிகுறி இல்லாத கொரோனாவைக் கண்டறிவது தொடர்பாகவும் நடைபெறுகின்றன. London school of hygiene and tropical medicine ஒரு வினோதமான ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறது.

நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பதையும், வாசனையை வைத்தே ஒருவரை அடையாளம் காணும் என்பதையும் நாம் அறிவோம். இதன் அடிப்படையில் நாய்களுக்குப் பயிற்சி அளித்து ஒருவரது நோயைக் கண்டறிய முடியுமா என்ற ஆராய்ச்சியை இதற்கு முன்னரே மேற்கொண்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் புற்றுநோய், பார்க்கின்ஸன், மலேரியா போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை நாய்களை வைத்து அடையாளம் கண்டுபிடித்ததில் வெற்றி பெற்றிருக்கிறது லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன். அதன் அடிப்படையிலேயே இம்முறை அறிகுறிகளற்ற கொரோனாவையும் கண்டறிய முயன்று வருகிறார்கள்.

‘கொரோனா நோயாளிகளுக்கென்று பிரத்யேகமான வாசனை என்று இருக்கக்கூடும். ஏனெனில், இது சுவாசம் தொடர்பான நோய் என்பதால் நிச்சயம் நாம் எதிர்பார்க்கிற முடிவுகள் கிடைக்கும்’ என்கிறார் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான பேராசிரியர் ஜேம்ஸ் லோகன்.

Tags :
× RELATED ஜப்பானில் 4 பேருக்கு கொரோனா 3.0 :...