காவிரி ஆணையக் கூட்டம் 3ம் முறையாக ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் 3வது முறையாக மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் வாரத்தில் கர்நாடகா அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க வேண்டும் என கடிதம் வழங்கியது.  இதற்கு ஆணையமும் அனுமதி வழங்கிய நிலையில் இத்தகைய நிலைப்பாடு உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என ஜூன் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் 17ம் தேதி நடைபெற இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இருப்பினும் ஜூன் 23ம் தேதியும் திட்டமிட்டபடி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நடைபெறவில்லை. இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இக்கூட்டம் ஜூலை 6ம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த தேதி விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவிக்கப்படும் என்று ஆணையத்தின் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததே கூட்டம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்படுவதற்கான காரணம் என கூறப்படுகிறது. மேலும் கோடைகால விடுமுறை முடிந்து உச்ச நீதிமன்றம் முழு அளவில் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: