75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 50 வயதுக்கு மேற்பட்ட பெண் கைதிகளை விடுவிக்க உத்தரவு: தண்டனை முடிந்தவர்களுக்கும் நிவாரணம்

புதுடெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சிறையில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், திருநங்கை கைதிகள் மற்றும் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் சிறையில் உள்ள தகுதிவாய்ந்த கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தகுதிவாய்ந்த கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், திருநங்கைகள் கைதிகள்.

* தண்டனை காலத்தை நிறைவு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்கள்.

* 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் கைதிகள்.

* பாதிக்கும் மேற்பட்ட தண்டனை காலத்தை சிறையில் கழித்த மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* அபராத தொகை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்கள்.

அதே சமயம், மரண தண்டனை, ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனை பெற்றவர்களுக்கும், பாலியல் பலாத்காரம், தீவிரவாத செயல்கள், வரதட்சணை கொலை, நிதி மோசடி போன்ற வழக்குகளில் கைதானவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். மேலும், சிறையில் நன்னடைத்தை அடிப்படையின் கீழ் மட்டுமே கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இதுதொடர்பாக, மாநில அளவிலான கண்காணிப்பு குழு ஒன்றையும் நியமிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: