காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் 235 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில், முதல் கட்டமாக 235 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதீர்பூர் பகுதியில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன் ஆகியோர் பங்கேற்று முதற்கட்டமாக 235 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை வழங்கினர்.

இதில், 190.08 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பகுதியில் 33 பிளாக்குகளுடன் 2112 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. பயனாளிகளின் தேர்வினை மாவட்ட நிர்வாகம் வேகவதி ஆற்றங்கரை ஒரம் குடியிருந்தவர்களையும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களையும் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகள் பங்களிப்பு தொகை செலுத்திவர்களுக்கு சுமார் 400 சதுர அடி கொண்ட 2112 பேருக்கு 1.50 லட்சம் மதிப்பிலான குடியிருப்பு ஆணைகள் வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அமைச்சர் அன்பரசன் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் சாக்கடை நீர்கள் தேங்கியும் முறையாக பராமரிக்காமலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பல்வேறு பிரச்னைகள் மக்கள் சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு தற்போது பொறுப்பேற்ற தமிழக அரசு இது போன்ற இன்னல்களை மக்கள் சந்திக்கக்கூடாது என்ற நோக்கில் அனைத்து பகுதிகளிலும் உயர்தர வசதிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம், வீடுகள் சுமார் 200 சதுர அடிகளால் தான் கட்டப்பட்டது.

இதனால், குறுகிய இடத்தில் பொதுமக்கள் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் விதமாக தற்போது அனைத்து இடங்களிலும் 400 சதுர அடிகளில் தாராளமாக தங்கும் அளவில் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.மேலும், காஞ்சிபுரம் நகரத்திற்கு நிகராக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துத் தரப்படும்’ என்றார். இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: