மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சியில் அரசு பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு: மாணவர்கள், பொதுமக்கள் அவதி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சி அரசு பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகளால் அப்பகுதியில் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வடகடம்பாடி, நல்லான் பிள்ளை பெற்றாள், பெருமாளேரி, அம்பாள் நகர், காட்டுத்தாங்கல், வசந்தபுரி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு, 900 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த பகுதிகளில் பெண் தூய்மை பணியாளர்கள் பிளிச்சிங் பவுடர் போடுவது, அனைத்து தெருக்களில் தேங்கும் குப்பை கழிவுகளை சேகரித்து உரத்தொட்டிக்கு கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வந்தனர். மேலும், கடந்த 4 வருடமாக குப்பைகளை தரம் பிரிக்காமல் நல்லான் பிள்ளை பெற்றாள் பகுதி இருளர் குடியிருப்பையொட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி சுற்று சுவர் அருகே குப்பைகளை கொட்டி விடுகின்றனர். அப்பகுதியை, கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டே செல்கின்றனர். ஒரு லட்சம் மதிப்பில் குப்பைகளை தரம் பிரிக்க உரத்தொட்டிகள் கட்டியும் அதில் கொட்டாமால் ஆங்காங்கே தூய்மை பணியாளர்கள் வீசி விட்டு செல்கின்றனர்.

இதனால், உரத்தொட்டிகள் பயன்பாடின்றி வீணாக உள்ளது. குப்பைகளில், மாமிசம் மற்றும் எலும்பு துண்டுகள் கிடப்பதால் தெரு நாய்கள் உல வந்து அந்த வழியாக செல்வோரையும், குப்பைகளை தின்ன வரும் கால்நடைகளையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. குப்பைகளை, தின்னும் கால்நடைகள் அதில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும் தின்று விடுவதால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக தலையிட்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப் பள்ளிக்கு அருகே உள்ள குப்பைகளை தரம் பிரிக்கும் தொட்டிகள் மற்றும் சிதறி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, இருளர் மக்கள் கூறுகையில், 60க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் சுற்று சுவருக்கு அருகே 2018ம் ஆண்டு குப்பைகளை தரம் பிரிக்க உரத்தொட்டிகள் அமைக்கப்பட்டது. ஊராட்சியில், சேகரிக்கும் குப்பைகளை கொண்டு வந்து உரத்தொட்டியில் கொட்டாமால் அருகில் உள்ள காலி இடத்தில் தூய்மை பணியாளர்கள் கொட்டி விடுகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பை கழிவுகளால் கொசு, ஈக்கள் அதிகமாகி பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கிறது. உடனே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்’ என்றனர். குப்பைகளில் மாமிசம் மற்றும் எலும்பு துண்டுகள் கிடப்பதால் தெரு நாய்கள்  உல வந்து அந்த வழியாக செல்வோரையும், குப்பைகளை தின்ன வரும் கால்நடைகளையும் துரத்தி துரத்தி கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

* பரவும் தொற்று நோய்?

நல்லான் பிள்ளை பெற்றாள் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடும், துர்நாற்றத்தாலும், அடிக்கடி குப்பைகளை ஏறிப்பதாலும் அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் வகுப்பில் உட்கார முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், மாதத்தில் 2 அல்லது 3  மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவலநிலை தொடர்கிறது.

Related Stories: