திருப்போரூ அருகே மர்மமான முறையில் 3 ஆடுகள் பலி

திருப்போரூர்: திருப்போரூரில் மர்மமான முறையில் 3 ஆடுகள் பலியாகின. இதுதொடர்பாக,  திருப்போரூர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் ஊராட்சி, வெங்கலேரி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வானை (60). இவர், 11 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவர் ஆலத்தூர் தனியார் தொழிற்சாலை அருகே தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். இந்நிலையில், அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் 3 ஆடுகள் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தெய்வானை இது குறித்து கிராம நிர்வாக அலுவலர், கால்நடை மருத்துவர் செல்லமணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து, கால்நடை மருத்துவர் பலியான ஆடுகளை பரிசோதனை செய்து, அவற்றின் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து, தெய்வானை திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், ‘தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை குடித்து ஆடுகள் இறந்திருக்கலாம். எனவே, உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: