பெருமாட்டுநல்லூர் பகுதியில் சோகம் மின் கம்பம் முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி: தப்பிய ஓடிய ஜேசிபி டிரைவருக்கு போலீஸ் வலை

கூடுவாஞ்சேரி: பெரும்மாட்டுநல்லூர் பகுதியில் ஜேசிபி இயந்திரம் வரவழைத்து மூள்செடிகளை அகற்றும்போது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக பலியானார். கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் பகுதியில்  துலுக்கானத்தம்மன் கோயில் தெரு உள்ளது. இங்கு  காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு பண்ணை இருக்கிறது. இங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த உலகநாதன் அவரது மனைவி அபிராமி மற்றும் 3 பிள்ளைகளுடன் கடந்த சில வருடங்களாக மாந்தோப்பு பண்ணையில் உள்ள வீட்டில் தங்கி பணியாளர்களாக தோட்ட வேலைகளை கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களது பண்ணைக்கு அருகே வினோத் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு, உள்ள மூள்செடிகளை அகற்றுவதற்காக, நேற்று  ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஜேசிபி இயந்திரம் தென்னை மரத்தை அகற்றும்போது அந்த மரமானது அருகே உள்ள மின்சார வயர்கள் மீது சாய்ந்ததில் இரண்டு மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்தது. இதில் மின் கம்பம் அருகே நின்று கொண்டு ஜேசிபி அகற்றும் பணியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அபிராமி மீது மின்கம்பம் விழுந்ததில் படுகாயம் அடைந்து, கீழே விழுந்துள்ளார்.

அங்கிருந்த, அவருடைய உறவினர்கள் அபிராமியை மீட்டு கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உடர்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார், நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில், தப்பி ஓடிய ஜேசிபி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: