சென்னையில் 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: வரும் 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க  வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் ஒத்துழைக்காததால் அதிமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் முழுமையாக முடங்கியுள்ளது என எடப்பாடி  பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டுடன் கூடிய  இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக  பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23ம் தேதி சென்னை வானகரத்தில்  நடந்தது. அதற்கு முன்னர் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ்  ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ெதாடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழு  நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம்  தலையிடாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம்  மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள்  எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் பொதுக்குழுவை நடத்தலாம். ஏற்கனவே  முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானத்தின் மீதும்  முடிவு எடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, பொதுக்குழு  நடத்தப்பட்டது. அதில் கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன்  தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக  தமிழ்மகன் உசேனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை  எடப்பாடி பழனிசாமி தான் முன்மொழிந்தார். அதை முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் வழிமொழிந்துள்ளனர். எனவே, இவர்கள் மீது  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று சண்முகம்  உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். அந்த மனுவில், வரும் 11ம் தேதி  நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர், பொதுக்குழுவுக்கு தடை கோரி இங்கு வழக்கு தொடர முடியாது. தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆகியோர், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக ஆஜராகி,  பொதுக்குழு நடத்துவதற்கு 15 நாட்களுக்கு முன்பே உறுப்பினர்களுக்கு  அறிவிக்கப்பட வேண்டும் என்று கட்சி விதி உள்ளது. ஆனால், எங்களுக்கு இன்று (நேற்று) தான் கிடைத்துள்ளது. எனவே,  விதிமுறைகளுக்கு முரணாக நடத்தப்பட உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க  வேண்டும். இதுதொடர்பாக மனு தாக்கல் செய்ய உள்ளோம். இதை அவசர வழக்காக  எடுத்து விசாரிக்க வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி மனுவை தாக்கல்  செய்யுங்கள் விசாரிக்கப்படும் என்றார்.

இதையடுத்து, பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார். அதில், கட்சி விதிகளின்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு அனுப்ப வேண்டும். ஆனால், கடந்த 1ம் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எந்த நிர்வாகியின் கையெழுத்தும் இல்லாமல் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்துதான் பொதுக்குழுவை கூட்ட முடியும். எனவே, விதிகளுக்கு முரணாக நடத்தப்படவுள்ள இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். பொதுக்குழு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எதனையும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் மூன்றாவது வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.

அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேற்கண்ட வழக்கு விவரங்கள் தொடர்பான கூடுதல் ஆவணங்கள் கொண்ட இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘இந்த வழக்கை பொறுத்தமட்டில் இரண்டாவது எதிர்மனுதாரரான ஓ.பன்னீர்செல்வத்தின் ஒத்துழைக்காததால் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கியுள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி பொதுக்குழு நடக்கும் என அறிவித்த பின்னர் அதனை தடுக்க பல்வேறு வழிகளை மேற்கொண்டார். குறிப்பாக ஒற்றைத் தலைமை என்ற கருத்து எழுந்தவுடன் பொதுக்குழுவை நடக்கவிடாமல் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதினார். இது அத்தனையும் கட்சி தொண்டர்கள் தங்களது உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற நோக்கில் செயல்பட்டார். உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஓபிஎஸ் உரிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் பங்கெடுக்க அழைப்புவிடுத்தும் அவர் கலந்து கொள்ளவில்லை.

மேலும் கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்பதை தாண்டி ஓபிஎஸ் கட்சியின் பொருளாளர். ஆனால் அவர் கட்சி நிதியை வீணாக்குவதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. மேலும் கட்சி செலவுக்கான தொகையையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாளர் என்ற முறையில் தனது கடமையை செய்யாமல் கட்சியின் நலனை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

மேலும் கடந்த 23ம் தேதி பொதுக்குழுவில் நடந்த சம்பவங்களை பார்க்கும்போது ஓபிஎஸ் அதிமுக தொண்டர்களிடையே செல்வாக்கையும், நம்பிக்கையையும் இழந்துவிட்டார் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. எனவேதான் இணைந்து செயல்பட ஓபிஎஸ் மறுத்து வருகிறார். இதையடுத்து வரும் 11ம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள் குறித்து முடிவெடுக்க விரிவான அஜண்டாவை பொதுக்குழு உறுப்பினர்கள் 2,432 பேர் கடிதம் மூலம் தயாரித்துள்ளனர்.

இதை தவிர கடந்த 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஒன்றைத் தலைமை கோரி 2,190 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணங்களும் தற்போதைய இந்த இடைக்கால மனுவோடு இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: