தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் உடன் தங்கியவருக்கு ஜாமின்: மும்பை ஐகோர்ட் உத்தரவு

மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உடன் தங்கியிருந்த சித்தார் பிதானிக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. கடந்த 2020ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பலரை கைது செய்தனர். அந்த வகையில் கடந்த மே மாதம் சுஷாந்த் சிங்கின் அறையில் தங்கியிருந்த அவரது நண்பர் சித்தார்த் பிதானியும் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது போதைப்பொருள் பயன்படுத்துதல், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் சித்தார்த் பிதானிக்கு ஜாமின் வழங்க மறுத்த நிலையில், அவரது தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினர். உயர்நீதிமன்ற நீதிபதி பாரதி எச்.டாங்ரே தலைமையிலான அமர்வு நேற்று விசாரணை நடத்தியது. அப்போது பல்வேறு நிபந்தனைகளுடன் சித்தார்த் பிதானிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

முன்னதாக சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாமுவேல் மிராண்டா, சமையல்காரர் திபேஷ் சாவந்த் ஆகிய இருவரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் சித்தார்த் பிதானி கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து லேப்டாப் மற்றும் போனில் இருந்த வீடியோக்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு கூறியது.

கங்கனா கோர்ட்டில் ஆஜர்

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தன் மீது சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக கூறி, பாடலாசிரியர் ஜாவத் அக்தர் என்பவர் நடிகை கங்கனா மீது அவமதிப்பு வழக்கு தொடுத்தார். அந்தேரியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு கங்கனாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன் கங்கனா ஆஜரானார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் குவிந்ததால், அவர்களை வெளியேற்ற கங்கனா தரப்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதன்படி அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு கங்கனா தரப்பில் சில ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

Related Stories: