நெல்லை - மேட்டுப்பாளையம், தாம்பரம் உள்ளிட்ட 4 சிறப்பு ரயில்களை நீடிப்பு செய்ய தெற்கு ரயில்வே முடிவு: ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பு

நெல்லை: நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரம் செல்லும் ரயில்கள் உள்பட 4 ரயில்களை மேலும் நீட்டிப்பு ெசய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக ரயில்வே வாரியத்தின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் கோடைகாலத்தில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கோடைகாலம் நிறைவு பெற்றவுடன் அந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. போதிய வருமானம் அளித்த ரயில்களை மீண்டும் இயக்கிட தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை - தாம்பரம் உள்ளிட்ட 4 ரயில்களை மேலும் நீட்டிப்பு செய்வது குறித்து முடிவெடுத்து ரயில்வே வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த 4 ரயில்களில் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக செல்லும் 2 ரயில்களும் அடங்குவதால், தென்காசி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக தமிழ் புத்தாண்டு முதல் கோடைகால சிறப்பு ரயில்கள் 3 மாதத்திற்கு அறிவிக்கப்பட்டன. அதன்படி நெல்லையில் இருந்து தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களுக்கு தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இவ்விரு ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நெல்லையில் இருந்து  தென்காசி வழியாக பழனி, பொள்ளாச்சிக்கு முதன்முறையாக ரயில் இயக்கப்பட்டதால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

மேலும் அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் ரயில் வழித்தட பயணிகளுக்கு சென்னை செல்வதற்கும் தாம்பரம் சிறப்பு ரயில் மிகவும் சௌகரியமாக காணப்பட்டது. இந்த சிறப்பு ரயில்கள் தட்கல் கட்டணத்துடன், அதாவது 1.3 மடங்கு கட்டணத்துடன் இயக்கப்பட்டாலும் பயணிகளிடையே நல்ல வரவேற்பினை பெற்றன. இரு சிறப்பு ரயில்கள் மூலமாக 3 மாதங்களில் ரூ.2.5 கோடிக்கும் மேல் வருமானம் தெற்கு ரயில்வேக்கு கிடைத்தது. எனவே வருமானம் கொழிக்கும் அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தின் வழியாக சென்னை மற்றும் கோவை மேட்டுப்பாளையத்திற்கு தினசரி ரயில்கள் இயக்கிட வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட நெல்லை - தாம்பரம், நெல்லை - மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்களை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - எர்ணாகுளம், தாம்பரம் - நாகர்கோவில், நெல்லை - தாம்பரம், நெல்லை - மேட்டுப்பாளையம் ஆகிய 4 ரயில்களை 3 மாதங்களுக்கு நீட்டித்திட ரயில்வே வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த 4 ரயில்களும் மீண்டும் 3 மாத காலத்திற்கு இயக்கப்படும் என தெரிகிறது. இத்தகைய வாராந்திர சிறப்பு ரயில்களை காலநீட்டிப்பு மட்டும் செய்யாமல், நிரந்திரமாக இயக்கிட தெற்கு ரயில்வே முன்வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: