தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விபரீதம்; மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

சென்னை: தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(எ)பாட்ஷா(18). இவர் பள்ளிக்கரணையை சேர்ந்த தனது நண்பர் முத்து என்பவருடன் சேர்ந்து டிடிகே சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டார். அப்போது பாட்ஷா தண்ணீர் தொட்டிக்குள் சென்று பணியில் ஈடுபட்டார். தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்ற மின்மோட்டர் போட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பாட்ஷா மின்சாரம் பாய்ந்து தண்ணீர் தொட்டிக்குள் சுருண்டு விழுந்தார். உடனே அவரது நண்பர் முத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பாட்ஷாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். அதைதொடர்ந்து சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: