கூடுவாஞ்சேரி அருகே மறியல் போராட்டத்தால் பரபரப்பு, டாரஸ் லாரி மோதி பெண் பலி; 30 அடி தூரத்துக்கு இழுத்து சென்ற அவலம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி  அருகே டாரஸ் லாரி மோதியதில்  கணவருடன் பைக்கில் சென்ற பெண் பலியானார். 30 அடி தூரத்துக்கு இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கணவர் படுகாயத்துடன் தப்பினார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பெரும்பாக்கம் கிராமம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (45). கொத்தனார். இவரது மனைவி காமாட்சி (35). சித்தாள்  வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். சின்னதுரை தனது குடும்பத்துடன் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் விநாயகபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மேடவாக்கம் அடுத்த வேங்கைவாசல் பகுதியில் கட்டிட வேலைக்காக கணவனும், மனைவியும் சென்றனர்.  பின்னர் வேலை முடிந்து இருவரும்  பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். கண்டி-கீரப்பாக்கம் சாலையில் வந்தபோது பின்னால் வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில்  இருவரும் கீழேவிழுந்தனர். லாரி சக்கரத்தில் சிக்கிய காமாட்சி 30 அடி தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு உடல் சிதைந்து பலியானார். சின்னதுரை படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் காமாட்சி சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதனிடையே, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பொதுமக்கள் துரத்தி சென்று கீரப்பாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் மடக்கிப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன், போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 நள்ளிரவு ஒரு மணி வரை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய மேலக்கோட்டையூர் முத்துமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் (58) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: