இலங்கை நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ கோஷத்தால் அதிபர் ஓட்டம்: எதிர்கட்சிகளின் அமளியால் பரபரப்பு

கொழும்பு: இலங்கை எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, திடீரென அவையை விட்டு வெளியேறினார். இலங்கையின் நாடாளுமன்ற கூட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களையும், பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். அப்போது ‘கோ ஹோம் கோத்தபய’ என்ற கோஷத்துடன் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அதனால் அவை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். அதன்பின் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்ற அவையை விட்டு வெளியேறிச் சென்றார்.

இதனால் சிறிது நேரம் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசிய போது, மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் பிரதமரும் அவரது அரசாங்கமும் சரியாக செயல்படவில்லை’ என்று குற்றம்சாட்டினார். இதேபோல் மற்ற எதிர்கட்சிகளின் உறுப்பினர்களும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியதால் இன்று அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

Related Stories: