ஹாரன் அடித்த தகராறில் கோஷ்டி மோதல் கத்தியால் வெட்டியதில்; 6 பேர் படுகாயம் 8 பேர் கைது

ஆவடி: ஆவடி அருகே ஹாரன் அடித்த தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனம் (23). சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், நேற்று மாலை கன்னியம்மன்நகர் பகுதியில் சரக்குகளை இறக்கிவிட்டு, தனது நண்பர் சூர்யாவை (19) லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

கன்னியம்மன்நகர் முருகர் கோயில் அருகே வந்தபோது, முன்னால் சென்ற மற்றொரு ஆட்டோ பழுதாகி நின்றது. இதனால் ஜனார்த்தனம் ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆட்டோவில் இருந்த வீராபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (22), ரஞ்சித் (30), மாணிக்கம் (21) மற்றும் ஹரிபிரசாத் (22) ஆகியோருக்கும், ஜனார்த்தனத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த 4 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சூர்யாவின் மணிக்கட்டில் வெட்டியுள்ளனர்.

தடுக்க முயன்ற ஜனார்த்தனத்தை கல்லால் சரமாரி தாக்கிவிட்டு தப்பினர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து ஜனார்த்தனம் தனது நண்பர்களுக்கு போன் செய்துள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த நண்பர்களான கார்த்திகேயன் (26), மூர்த்தி (28) ஆகியோர் சூர்யாவை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, 4 பேர் கும்பலை தேடினர். பின்னர், ஆவடி வீராபுரம் அருகே நின்றுகொண்டிருந்த 4 பேரையும் சுற்றிவளைத்து கத்தியாலும் கையாலும் சரமாரி தாக்கியுள்ளனர்.

இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, படுகாயத்துடன் இருந்த 4 பேரையும் மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனார்த்தனம், பிரகாஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோஷ்டி மோதல் சம்பவம் ஆவடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: