அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஏட்டுவை தாக்கிய போதை ஆசாமிகள்; 3 பேர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்றதை தடுத்த போலீஸ் ஏட்டு தாக்கப்பட்டார். இதுதொடர்பாக போதை ஆசாமிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அம்பத்தூர் பேருந்து பேருந்து நிலையம் பகுதியில் மதுபோதையில் 3 பேர் ரகளையில் ஈடுபடுவதாக அம்பத்தூர் போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்படி தலைமை காவலர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது, பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் 3 பேர் கும்பல் செல்போனை பறிக்க முயன்றனர். இதை பார்த்து தடுக்க முயன்ற ஏட்டு பிரபாகரனை போதை ஆசாமிகள் சரமாரி தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் ஏட்டு பிரபாகரன் புகார் செய்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பிரபு (29), ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவா என்ற சிவக்குமார்(43), அயனாவரம் பகுதியை சேர்ந்த சூர்யா (24) என்பது தெரியவந்தது.

மேலும் சிவா என்ற சிவக்குமார் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அம்பத்தூரில் உள்ள 2வது மனைவி வீட்டிற்கு வந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறியதும் அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் பெண் ஐடி ஊழியரிடம் செல்போனை பறிக்க முயன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: