அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து கல்லூரி பயிலும் மாணவிகளுக்கும் மாதம் ரூ. 1000 உதவி தொகை; தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து கல்லூரி பயிலும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் வெளியிட்ட அறிக்கை: அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்லூரி படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டமானது இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு, ஜூலை 10ம் தேதி வரை அதற்காக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மாணவிகள் தங்கள் பள்ளி, கல்லூரிகள் மூலமோ அல்லது நேரடியாகவோ இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது இணையதளம் மூலம் மாணவிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய அரசு குறிப்பிட்டிருக்கும் அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள். நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவை மட்டுமே.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை விட அரசு உதவிப்பெறும் பள்ளிகளே பெரும்பாலான இடங்களில் ஏழை-எளிய மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகள் இல்லாத இடங்களில் அரசு உதவிபெறும் பள்ளிகள் மூலமாகவே மாணவர்கள் இலவசமாக கல்வி கற்று வருகின்றனர். அதில் கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை-எளிய மாணவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே, அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து கல்லூரி பயிலும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: