தஞ்சை ஜெபமாலைபுரத்தில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு

தஞ்சை: தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட  தீ விபத்து தொடர்ந்து 2-வது நாளாக புகைமூட்டமாக இருப்பதால் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தீ அணைக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து புகை பரவி வருகிறது. தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் மாநகராட்சி 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினமும் கொண்டு வந்து கொட்டப்படும். இந்த நிலையில் நேற்று மாலை இந்த குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பிடித்தது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் தீ மளமளவென பரவியது. அப்போது குப்பைக்கிடங்கில் இருந்து தீப்பொறி அருகில் இருந்த வீடுகளுக்கும் பற்ற தொடங்கியது. இந்நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரான ஆரோக்கியசாமியின் வீட்டிலும் தீ பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துகொண்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் வீட்டுக்குள் நடக்க முடியாமல் ஆரோக்கியசாமி சிக்கி கொண்டார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் பலத்த தீக்காயத்துடன் ஆரோக்கியசாமியை மீட்டு 108 ஆம்புலன்சு உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், எம்.எல்,ஏ நீலமேகம்  தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும் தீவிபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியசாமி இன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: