வாடகை உயர்த்தி தரக்கோரி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் இன்று 2-வது நாள் வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படுமா?

தண்டையார்பேட்டை: சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இருந்து சரக்குகளை கையாள்வதற்கு கன்டெய்னர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த லாரிகளுக்கான வாடகை கடந்த 2014ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பிறகு வாடகை உயர்த்தப்படவில்லை. இதுசம்பந்தமாக பலமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில், வாடகை உயர்த்தி தரக்கோரி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் நேற்றுமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பல கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக மஞ்சம்பாக்கம், மாதவரம், மணலிபுதுநகர், திருவொற்றியூர், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் பகுதிகளில் கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் சாலைகள் காலியாக உள்ளன. இதனிடையே சென்னை துறைமுக சேர்மன் மற்றும் துறைமுக அதிகாரிகளுடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 14 தொழிற்சங்க நிர்வாகிகள், சிஎப்எஸ் நிறுவனங்கள், ஆர்டிஓ  தலைமையில் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால் கன்டெய்னர் வேலை நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இல்லையேனில், போராட்டம் தொடரும் என்று கூறப்படுகிறது. இன்று 2வது நாளாக நடைபெறும் போராட்டம் காரணமாக பல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து துறைமுக  ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில், ‘’வருடாவருடம் 10 சதவீதம்  வாடகை உயர்வு என்ற வகையில் கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 80 சதவீத   வாடகையை வழங்கும் வரை  வேலை நிறுத்தம் நடைபெறும்.  சரக்குகளை இறக்கி  வைத்துவிட்டு வரும் காலி சரக்கு பெட்டகங்களை நிறுத்த 20 அடி பெட்டகத்திற்கு  500 ரூபாயும் 40 அடி பெட்டகத்துக்கு 700 ரூபாயும்  கட்டாய கட்டணம்  வசூலிக்கப்படுவதை நிறுத்தவேண்டும்.

15 நாட்களில் அனைத்து சிஎப்எஸ்களும்  ஒரே மாதிரியான வாடகை தரவேண்டும்’’ என்று 3 கோரிக்கைகளை முன்வைத்து வேலை  நிறுத்தம் நடைபெற்று வருகிறது’ என்றார். லாரி டிரைவர்கள் கூறுகையில், ‘’ வெளிமாவட்டங்களில் இருந்து  இங்கு வேலை செய்து வருகிறோம்.  லாரி ஓடினால்தான் எங்களுக்கு வருமானம். லாரிகள் ஓடாததால் சாப்பாட்டுக்குகூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம்.  சொந்த ஊருக்கு போகலாம் என்று நினைத்தால் பணம் இல்லை.  என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறோம். துறைமுகம் நிர்வாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு தீர்வுகாணவேண்டும்’ என்றனர்.

Related Stories: