வெள்ளப் பெருக்கால் குற்றாலம், மெயினருவியில் குளிக்க தடை பழைய குற்றாலம்; ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்

தென்காசி: குற்றாலம் மெயினருவியில் நேற்று காலை விலக்கி கொள்ளப்பட்ட தடை, வெள்ளப்பெருக்கால் இரவில் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், இன்று பழைய குற்றால அருவி, ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக சாரல் நன்றாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதையடுத்து மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து 2 அருவிகளிலும் விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. நேற்று மதியம் வரை லேசான வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பின்னர் மேக கூட்டம் திரண்டு மழை பெய்தது.

இதனால் இரவு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து நேற்றிரவு 11 மணி முதல் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இன்று காலை மெயினருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், தடை காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பினர். இருப்பினும் ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நீராடி மகிழ்ந்தனர்.

Related Stories: