அமெரிக்காவின் சுதந்திர தின நிகழ்ச்சி; துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி: மர்ம நபரை பிடித்து விசாரணை

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான நிலையில், மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. சிகாகோவின் ஹைலேண்ட் பூங்காவில் அமெரிக்காவின் சுதந்திர தின அணிவகுப்பின் போது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போது சம்பவ இடத்திலேயே 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ராபர்ட் கிரிமோ (22) என்ற சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தாக்குதல் நடத்திய குற்றவாளி மொட்டை மாடியில் நின்று கொண்டு அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியை கொண்டு நூற்றுக்கணக்கானோரை நோக்கி சுட்டான். அதனால் சம்பவ இடத்திலேயே 6 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். சிகாகோவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறுகையில், ‘துப்பாக்கி வன்முறை தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நான் பின்வாங்க மாட்டேன். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

Related Stories: