பாணாவரம் அடுத்த மேலேரி ஊராட்சியில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

பாணாவரம் :  பாணாவரம் அருகே குடியிருக்க லாயக்கற்ற தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மேலேரி  ஊராட்சிக்கு உட்பட்டது அருந்ததிபாளையம் கிராமம். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன.

இத்தொகுப்பு வீடுகளில் கான்கிரீட் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. சுவர்களில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து இப்ப விழுமோ எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளது. இத்தொகுப்பு வீடுகளை பழுது பார்க்க கடந்த ஆட்சியில் பல்வேறு முறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், பழுதடைந்த வீடுகளில் வசிப்பதற்கே  எங்களுக்கு அச்சமாக உள்ளது. திடீரென கான்கிரீட் கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால், ஒருவித அச்சத்துடனே குழந்தைகளுடன் ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்து வாழ்கிறோம். மழை காலங்களில் நாங்கள் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை.

இந்த வீட்டை விட்டால் எங்களுக்கு வேறு வசதியும் இல்லை. குடியிருக்க லாயக்கற்ற இந்த வீடுகளை இடித்துவிட்டு எங்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பருவ மழைக்காலம் தொடங்கும் முன்னரே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தொகுப்பு வீடுகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: