2 ஆண்டுகளுக்கு பிறகு பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனிமாத நாற்று நடவு விழா-பொன்னேர் பூட்டி பட்டீஸ்வரர் வயலில் இறங்கினார்

தொண்டாமுத்தூர் : பேரூர் புராணத்தில் கூறப்படும் இந்திர விழாவானது கொங்கு மண்டலம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நாற்று நடவு திருவிழாவாகவும், சிவபெருமானை பொன்னேர் பூட்டி ஏர் உழும் விழாவாகவும்  ண்டாடப்பட்டு வருகிறது.ஆனிமாதத்தில் கிருத்திகையில் துவங்கி பூராட நட்சத்திரம் வரையில் ஒரு வார காலம் இவ்விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் இவ்விழா ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த வாரம் நாற்று நடவு விழா துவங்கியது. பேரூரில் தேவேந்திர குல வேளாளர் மண்டபத்தில் நெல் முளையிடப்பட்டு,பக்தர்கள் விரதம் மேற்கொண்டிருந்தனர். இதைதொடர்ந்து பேரூர் பட்டீஸ்வரர்,பச்சை நாயகி அம்மன் இருவரும் நாள்தோறும் நெல்மணிக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சப்பரத்தில் திருவீதி உலா அழைத்து வரப்பட்டனர்.

7ம் நாளாகிய நேற்று நாற்று நடவு திருவிழாவையொட்டி பட்டீஸ்வரர் பொன்னேர் பூட்டிட,பச்சை நாயகி அம்மன் நாற்றுகளுடன் கூடிய கூடையை கையில் ஏந்தி உற்சவருடன் சப்பரத்தில் திருவீதி உலாவாக தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தம்பதி சமேதரராக திருவீதி உலாவாக வயலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

சப்பரத்தை சுற்றிலும் கைகளில் நாற்றுக்களுடன் வந்த பக்தர்கள் குலவையிட்டு பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுடன் வயல்வெளியில் இறங்கி நாற்றுக்களை நட்டனர்.

தொடர்ந்து மாணிக்கவாசகருக்கு கழுத்தை திருப்பி திசை அறிவித்த நந்தி பெருமானுக்கு தாடை வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனி மாத நாற்று நடவு திருவிழாவையொட்டி பேரூர் பட்டீஸ்வரர்,பச்சை நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனைகள் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: