பருவ மழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு பயிற்சி-தோட்டக்கலைத்துறை ஏற்பாடு

சேலம் : சேலம் மாவட்டம் தோட்டக்கலை பயிர்களுக்கு என பிரசித்திபெற்ற மாவட்டமாகும். சுமார் 1,87,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அவற்றுள் மரவள்ளி மற்றும் மா முக்கிய பயிர்களாகும். தற்போது தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மழையினால் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தோட்டக்கலைத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக அறுவடை முடிந்த மா, கொய்யா மரங்களில் அடர்த்தியாக உள்ள கிளைகளையும் தேவையில்லாத கிளைகளையும், காய்ந்த கிளைகளையும் கவாத்து செய்து அகற்றுவது நல்லது. வாழை மரங்கள் கம்புகளை கொண்டு மரங்களை கட்டிவிடுவது நல்லது அல்லது நைலான் ரோப் கொண்டு மரங்களை கட்டி பாதுகாக்கலாம். செடிகளைச்சுற்றி வரப்புகளை உயர அமைத்து தண்ணீர் தேங்காதவாறு வடிகால் வசதி செய்து மழையிலிருந்து பாதுகாக்கலாம்.

காய்கறி பயிர்களுக்கு வடிகால் வசதிகளை அமைத்து மழையிலிருந்து பாதுகாக்கலாம். மேலும் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் மழை நீரினால் எளிதில் பாதிக்கக்கூடிய தோட்டக்கலைப்பயிர்களை குறிப்பாக காய்கறிப்பயிர்கள் நடவு செய்வதை தவிர்த்தல் நல்லது. அல்லது முறையான வடிகால் வசதி செய்த பின்னர் நடவு செய்தல் வேண்டும்.

காய்கறிப்பயிர்கள் மற்றும் கீரை வகைகளில் அதிகளவு தண்ணீரினால் வேர் அழுகல், வாடல் போன்ற பூஞ்சான மற்றும் பாக்ட்ரியா நோய்கள் ஏற்படும். அதனை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடவு செய்வதற்கு முன்பும் பின்பும் நன்கு மக்கிய தொழு எருவுடன் சூடோமோனாஸ் அல்லது பேசில்லஸ் கலந்து வேர்ப்பகுதிகளிலிட்டு தண்ணீர் பாய்ச்சினால் வேர் அழுகல் போன்ற பதிப்பிலிருந்து பாதுகாக்கலாம். விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு தென்மேற்கு பருவமழையினால் தோட்டக்கலைப்பயிர்கள் எவ்வித சேதமுமின்றி நல்ல விளைச்சல் பெற கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: