பள்ளியை வேறு பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-சித்தூரில் நடந்தது

சித்தூர் :  சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடுநிலைப்பள்ளியை வேறொரு பகுதிக்கு மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நேற்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தூர் மாவட்டம், பால சமுத்திரம் மண்டலம் டிஎன்ஆர்புரம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர். அப்போது, தங்கள் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை வேறொரு பகுதிக்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது மாநில அரசு எங்கள் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை 5 கிமீ தொலைவில் உள்ள திருமலை ராஜுபுரம் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இணைத்துள்ளார்கள்.

இதனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் 5 கிமீ வரை நடந்து பள்ளிக்கூடத்திற்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டு விடும். மேலும் எங்கள் கிராமத்தில் இருந்து திருமலை ராஜு புரம் கிராமத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லை. ஆட்டோவில் மட்டுமே செல்ல வேண்டும். நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வருகிறோம். தற்போது பக்கத்து கிராமமான திருமலை ராஜபுரம் கிராமத்தில் பள்ளியை இணைத்தால் அவர்கள் ஆட்டோவில் சென்று வர ₹40 ரூபாய் வழங்க வேண்டும். கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமாக இருக்கிறது. இதில் நாள் ஒன்றுக்கு 40 ரூபாய் ஆட்டோவிற்கு வழங்கினால் நாங்கள் எவ்வாறு குழந்தைகளை வளர்க்க முடியும்.

அதுமட்டுமின்றி எங்கள் கிராமத்தில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு மாணவ மாணவிகள் செல்ல வேண்டுமென்றால் நரசிம்மாபுரம் கிராமம் அருகே உள்ள ஆற்றை கடந்து தான் பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும். இதனால் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மானம் மாணவிகளின் உயிருக்கு யார் பாதுகாப்பு வழங்குவார்கள். இதுகுறித்து மாநில துணை முதலமைச்சர் நாராயணசாமியிடம் புகார் தெரிவித்தோம் ஆனால் அவர் அரசு எடுத்த முடிவுக்கு நான் எதுவும் செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

 

இதனால் மண்டல கல்வித்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தோம். அதிகாரியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை வேறொரு கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றாமல் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளோடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: