குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர்; கணவரை இழந்து தவித்த தாயை ஆன்மீக சுற்றுப்பயணம் அழைத்து செல்லும் மகன்

திருமலை: கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (45). பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாய் ரத்னம்மா (74). கிருஷ்ணகுமாரின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் தனிமையை உணர்வதாக தனது மகனிடம் கூறி வருந்தியுள்ளார் ரத்னம்மா. அவருக்கு ஆறுதல் கூறியதோடு, ‘ஹாசன் மாவட்டம் பேளூரில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று வரலாமா?’ என கிருஷ்ணகுமார் கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘எனது வாழ்நாளில் பிரசித்தி பெற்ற எந்த கோயிலுக்கும் சென்றதில்லை’ என ஆதங்கப்பட்டார்.

இதனால் தனது தாயை ஆன்மீக சுற்றுலா அழைத்துச்செல்ல கிருஷ்ணகுமார் திட்டமிட்டார். அதன்படி கடந்த 2018, ஜனவரி 16ம்தேதி கிருஷ்ணகுமார், தனது தாயை ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல தொடங்கினார். இதற்காக தனது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய ஸ்கூட்டரில் தாயுடன் பயணத்தை தொடங்கினார். முதலில் பேளூர் ஓலேபீடு கோயிலுக்கு சென்றனர். பின்னர், ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, புதுவை, தமிழகம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டனர். அங்குள்ள இந்து கோயில்கள் மட்டுமின்றி பிற மத வழிபாடு தலங்களுக்கும் சென்றுள்ளனர்.

இதனிடையே கடந்த 2020ல் கொரோனா பரவல் காரணமாக பல இடங்களில் கோயில்கள் மூடப்பட்டன. இதனால் பயணத்தை நிறுத்தி வைத்திருந்த அவர்கள் தற்போது மீண்டும் தங்களது ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளனர். கடந்த 2 ஆண்டு 9 மாதங்களில் சுமார் 56 ஆயிரம் கிமீ தூரம் ஸ்கூட்டரிலேயே பயணம் செய்துள்ளனர். நேற்று தனது தாயை திருப்பதிக்கு கிருஷ்ணகுமார் அழைத்து வந்தார். அங்கு ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார், கோவிந்தராஜசுவாமி, கபிலேஸ்வர சுவாமி உள்பட அனைத்து கோயில்களுக்கும் அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘கூட்டு குடும்பமாக வசித்து வந்ததால் எனது தாய் பல ஆண்டுகளாக சமையலறையை விட்டு வெளியே வராமல் இருந்தார். வெளி உலகமே தெரியாமல் இருந்ததால் எந்த கோயிலுக்கும் சென்றதில்லை. ஆனால் கோயில்களுக்கு செல்லவேண்டும் என ஆசை இருந்தது. வீட்டு பணிகள் காரணமாக சொல்லாமல் இருந்தார். தந்தையின் இறப்புக்கு பின்னர்தான், தாயிடம் மனம்விட்டு பேசும்போது பல விஷயங்கள் புரிந்தது. அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் நாடு முழுவதும் ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளோம்.

நான் திருமணம் செய்துகொள்ளாததால் சம்பாதித்த மொத்த பணத்தையும் எனது தாய்க்காக செலவு செய்கிறேன். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். கடைசி காலம் வரை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதுதான் ஒவ்வொரு வாரிசின் கடமை’ என்றார்.

Related Stories: