ஊழியரை நோக்கி துப்பாக்கியை காட்டிய மாஜி தாசில்தார்: எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள மூவாற்றுப்புழா பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (84). ஓய்வு பெற்ற தாசில்தார். துப்பாக்கி வைத்துள்ளார். லைசென்ஸ் காலாவதியானதால் அதை புதுப்பிப்பதற்காக நேற்று மாலை எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, புதுப்பிப்பதற்கான கட்டணத்தை செலுத்தி விட்டு தபால் பிரிவுக்கு சென்று, ஆவணங்களை கொடுத்தார். அப்போது திடீரென பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, ஊழியரை நோக்கி நீட்டினார். ஊழியர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சக ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். கோபாலகிருஷ்ணன், துப்பாக்கியுடன் நிற்பதை ஒரு ஊழியர் போட்டோ எடுத்து உதவி கலெக்டருக்கு அனுப்பினார்.

உடனே திருக்ககாக்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கோபாலகிருஷ்ணனிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றினர். 22 ரக கை துப்பாக்கியான அதில் 8 தோட்டாக்களும் நிரப்பப்பட்டிருந்தன. அவரிடமிருந்த ஆவணங்களை போலீசார் பரிசோதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை. இதையடுத்து கோபாலகிருஷ்ணனை போலீசார் எச்சரித்து விடுவித்தனர்.

Related Stories: