பல்வேறு கிராமங்களில் பூசணி சாகுபடி தீவிரம்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில், தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியதையடுத்து, பூசணி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

 பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில்,  தென்னைக்கு அடுத்தப்படியாக காய்கறி சாகுபடியே அதிகம் உள்ளது. அதிலும் தக்காளி மற்றும் வெள்ளை பூசணி, அரசாணிக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிகம்பேர்  ஆர்வம் காட்டுகின்றனர்.

இதில் வெள்ளை பூசணியானது வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி, ஆர்.பொன்னாபுரம், ஜமீன்முத்தூர், கோவிந்தனூர்,  சூலக்கல், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்கின்றனர்.   கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்குபிறகு, இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து சில மாதமாக மழையின்றி போனது. சுற்றுவட்டார கிராமங்களில் வெயிலின தா’கம் அதிகமான மாதங்களில், பூசணி சாகுபடி மேற்கொள்வதை விவசாயிகள் தவிர்த்தனர். மேலும் சில கிராமங்களில், ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட பூசணிகள் பல வெயிலின் தாக்கத்தால் செடியிலேயே அழுகியது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

பின், இந்த ஆண்டில் அண்மையில் பெய்த கோடை மழையையொட்டி, ஜமீன்முத்தூர், தாளக்கரை, நல்லிக்கவுண்டன்பாளையம், ஆர்.பொன்னாபுரம், வடக்கிபாளையம், புரவிபாளையம், நடுப்புணி உள்ளிட்ட  பல கிராமங்களிலே பூசணி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கினர். அதன்பின், கடந்த மாதம் இறுதியிலிருந்து தென்மேற்கு பருவமழை துவக்கத்தால், தற்போது பூசணி செடிகள் தளைத்து அதில் பூ பூத்து காய்ப்பு திறன் துவங்கியுள்ளது.

 பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது பூசணி சாகுபடி துவக்கத்தால், மார்க்கெட்டுக்கு உள்ளூர் பூசணிகள் வரத்து குறைந்துள்ளது. அதற்கு பதிலாக திண்டுக்கல், பழனி, கணியூர், தளி உள்ளிட்ட பகுதியிலிருந்த பூசணி வரத்து உள்ளது. உள்ளூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூசணி இன்னும் ஒன்றரை மாதத்தில் நல்ல விளைச்சலடையும். அந்நேரத்தில் மார்க்கெட்டுக்கு பூசணி வரத்து அதிகரிப்பதுடன், விலையும் குறைய வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: