ஆழியாற்றில் முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பை குறைத்து பழைய ஆயக்கட்டு மெயின் வாய்க்கால் சீரமைப்பு பணி தீவிரம்-விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி : முதல்போக சாகுபடிக்காக ஆழியாறு அணையிலிருந்து நீர் திறப்பை குறைத்து பழைய ஆயக்கட்டு மெயின் வாய்க்கால் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையிலிருந்து  பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.  இந்த ஆண்டில் கடந்த மே மாதத்தில் பெய்த கோடை மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து ஓரளவு இருந்தது. இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு, கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்கும், ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு தொடர்ந்திருந்தது.

 இந்த நிலையில், முதல்போக சாகுபடிக்கு முன்பாக, ஆனைமலை மற்றும் அதன் சுற்று பகுதி வழியாக செல்லும் பழைய ஆயக்கட்டு பாசன மெயின் வாய்க்கால்கள் சீரமைப்பு பணிக்காக, ஆழியாற்றிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தின் மெயின் வாய்க்கால் பகுதிக்கு தண்ணீர் திறப்பு அண்மையில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட காரபட்டி, அரியாபுரம், வடக்கலூர், பெரியணை உள்ளிட்ட  5 வாய்க்கால் பகுதியில், மெயின் வாய்க்கால்களில் உள்ள செடி கொடிகளையும், புதர்களையும் அப்புறப்படுத்தப்படுகிறது.

வாய்க்காலின் நடுப்பகுதி மற்றும் பக்கவாட்டில் உள்ள மேல்மட்ட சகதிகளை, பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றி சீர்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. இப்பணியை இன்னும் ஒரு வாரத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது.

 இப்பணி நிவைடைந்தவுடன், பழைய ஆயக்கட்டு மெயின் வாய்க்கால்களில் தண்ணீர் சீராக செல்வதுடன், கடைமடை விவசாயிகளுக்கும் முறையாக தண்ணீர் கிடைக்க ஏதுவாக இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும், பழைய ஆயக்கட்டு மெயின் வாய்க்கால் சீரமைப்பு பணிக்கு பிறகு, தென்மேற்கு பருவமழை வலுத்தாலும், தண்ணீர் சீராக விரைந்து செல்லும் வகையில் அமைவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

விவசாயிகள் கூறுகையில், ‘‘ஆழியார் அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட மெயின் வாய்க்காலில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மாதம் தண்ணீர் திறப்பு இருக்கும். தண்ணீர் திறப்பால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. தென்மேற்கு பருவமழை வலுப்பதற்கு முன்னதாக மெயின் வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல் இந்த ஆண்டிலும், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் மெயின் வாய்க்காரை சீரமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடக்கிறது.

இப்பணியை விரைந்து மேற்கொண்டு, விவசாய நிலத்துக்கு மீண்டும் ஆழியாற்றிலிருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாய்க்காலை  சீரமைப்பதன் மூலம்,  அணைகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் விரயமாகாமல் கடை மடை விவசாயிகளுக்கு முறையாக பகிர்ந்தளிக்க முடியும். அதற்கான துரித நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்’’ என்றனர்.

Related Stories: