திருவாலங்காட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

திருத்தணி: திருவாலங்காட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் குவிந்துகிடக்கும் குப்பையால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவாலங்காட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். இங்கு காய்ச்சல், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரசவமும் பார்க்கப்படுவதால் ஏராளமான கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு வருகின்றனர்.

மேலும் விபத்தில் காயம் அடைகின்றவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டி வருகின்றனர். மேலும் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர்களும் இந்த இடத்தில்தான் குப்பையை கொட்டுகின்றனர். தற்போது மலைபோல் குப்பை குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் குப்பை மேட்டில் கிடக்கும் கால்நடை கழிவுகளை சாப்பிடுவதற்கு பன்றிகள் அதிகமாக வருகிறது. எனவே, குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குழு என்னவானது?

கடந்த அதிமுக ஆட்சியின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய குழு அமைக்கப்பட்டது.  ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட குழுவினர், காலப்போக்கில் தங்களது பணிகளை சரியாக செய்யவில்லை. இதன்காரணமாக திருத்தணி, திருவாலங்காடு பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது திமுக அரசு எடுத்துள்ள தீவிர நடவடிக்கை காரணமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அவற்றை விற்பனை செய்கின்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

திருத்தணி, திருவாலங்காடு பகுதியில் புகழ்பெற்ற கோயில்கள் உள்ளதால் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இதன்காரணமாகவும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. எனவே, இவற்றையும் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: