கூடலூர் தேவாலா அருகே கடமான் வேட்டையாடிய 4 பேர் கும்பல் கைது-துப்பாக்கி,தோட்டாக்கள் பறிமுதல்

ஊட்டி : கூடலூர் தேவாலா அருகே நாடுகாணி,பால்மேடு வனப்பகுதியில் கடமானை வேட்டையாடிய 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மான் கறி, துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வனப்பரப்பு மிகுந்த நீலகிரி மாவட்டத்தில் புலி, சிறுத்தை, யானை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளன. கூடலூர் பகுதி கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால், உள்ளூர் வேட்டை கும்பல் மட்டுமின்றி கேரள மாநிலத்தை சேர்ந்த வேட்டை கும்பல்களும் வனப்பகுதிகளில் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். வேட்டையாடும் வனவிலங்குகளை சில தனியார் காட்டேஜ்களில் தங்கக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு உணவிற்காக விற்பனை செய்யப்படுவதாகவும், கேரளாவிற்கு கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேவாலா உட்கோட்டம், தேவாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதிகளில் கள்ள துப்பாக்கி பயன்படுத்தி அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் எஸ்ஐக்கள் திருக்கேஷ்வரன், பிரதீப்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கடந்த 2ம் தேதி இரவு நாடுகாணி, பால்மேடு ஆகிய வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.

அப்போது வனப்பகுதிகளில் சந்தேகமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் உள்ளூர் வேட்டை கும்பல் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நாடுகாணி பால்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (38), பெரியசூண்டி, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மைக்கேல் (30), மரப்பாலம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (33), அருண் (26) ஆகியோரை கைது செய்த தனிப்பிரிவினர் அவர்களிடம் இருந்து 2 பைகள் நிறைய கடமான் கறி, துப்பாக்கி, தோட்டாக்கள், டார்ச் லைட், கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து தேவாலா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இக்கும்பல் கடமானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories: