பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் கால்நடைகள், மனிதர்களை தாக்கிய புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

ஊட்டி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்துள்ள கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோபால்சாமி பெட்டா, லக்கிம்புரா வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கவியப்பா என்பவர் கடந்த 2ம் தேதி பகலில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது புலி ஒன்று மாட்டை வேட்டையாடியது. இதனை பார்த்த கவியப்பா புலியை விரட்டியுள்ளார். அப்போது அந்த புலி கவியப்பா மீது பாய்ந்தது. இதில் அவரின் வலது கண் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

புலி அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு மைசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அன்றைய தினம் மாலை ராஜேஷ் என்பவரையும் புலி தாக்கியது. இதனை தொடர்ந்து மனிதர்களை தாக்கி வரும் புலியை பிடிக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தினர். கர்நாடகா வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு புலியை தேடும் பணியை நேற்று முன்தினம் துவக்கினர்.

கும்கி யானை மீது பந்திப்பூர் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் வெங்கடேஷ் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் அமர்ந்து இருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். தனியார் விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த புலியை வனத்துறையினர் கண்டனர். அதன் உடலில் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. புலி மயங்கிய நிலையில், ராட்சத வலை உதவியுடன் கூண்டில் அடைத்து தூக்கிச் சென்றனர். பிடிபட்ட ஆண் புலி சுமார் 10 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பிடிபட்ட புலியை மைசூரு வன உயிரின மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்றனர். பந்திப்பூரில் மனிதர்களை தாக்கிய புலியை 15 மணி நேரத்திற்குள் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து கர்நாடக வனத்துறையினர் கூறுகையில், ‘‘ஆண் புலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருக்கிறது. இதனால் வேட்டையாடும் திறனை இழந்துள்ளதால் மாடு, மனிதர்களை தாக்கி வருகிறது. அதைப்பிடித்து மறுவாழ்வு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Related Stories: