குன்னூர் காட்டேரி பகுதியில் நிலச்சரிவு அபாய பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம், மண், பாறைகள் வெட்டி அகற்றம்-மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

குன்னூர் :  குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் புவியியல் துறையினர் நிலச்சரிவு பகுதி என அறிவித்த பகுதியில் விதி மீறி மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி இரவும் பகலுமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் கடந்த 2009ம் ஆண்டு பெய்த கன மழையில் மிகப்பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் காட்டேரி, மரப்பாலம், டபுள்ரோடு, பர்லியாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டது.  

குறிப்பாக காட்டேரி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டதில் அங்கிருந்த குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது.அதேபோல் 2019 மற்றும் 2020ம் ஆண்டும் பெரும் சேதம் ஏற்பட்டது. பின்னர் தமிழக புவியியல் துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நிலச்சரிவு பகுதி என அறிவித்துள்ளது. இந்த பகுதியில் மண் அகற்றவும், பாறைகள் உடைக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும் அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு கட்டிடங்கள் கட்டவும், பட்டா வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மழை காலத்தில் இங்கு வசிக்கும் மக்களை சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்படுவது வழக்கம்.  தற்போது இந்த பகுதியில் விவசாயம் என்ற பெயரில் விதி மீறி மண் மற்றும் பாறைகளை அகற்றி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பொக்லைன் பயன்படுத்த தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அதுவும் விவசாயம் சார்ந்த பணிகள் மட்டுமே செய்ய வேண்டும்.

ஆனால் தனியார் அமைப்பினர் விவசாயம் என்ற பெயரில் காட்டேஜ் கட்ட அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அதிகாரிகள் சிலரின் உதவியோடு இது போன்று விதி மீறி மண் மற்றும் பாறைகளை அகற்றி வருகின்றனர்.

குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் புவியியல் துறையால் நிலச்சரிவு அபாயம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பொக்லைன் பயன்படுத்தி விதி மீறி மண் மற்றும் பாறைகளை அகற்றி வருகின்றனர்.  இது குறித்து பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Related Stories: