கோத்தகிரி வனப்பகுதியில் பலாப்பழத்தை மரத்தில் இருந்து பறிக்கும் காட்டுயானை-சமூக வலைதளத்தில் வைரல்

கோத்தகிரி :  கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழம் சீசன் தீவிரமடைந்துள்ள நிலையில் காட்டு யானை ஒன்று பலா மரத்தில் கால்களை  வைத்து பலாப்பழத்தை பறிக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சபனை, மாமரம், முள்ளூர், கோழிக்கரை, தட்டப்பள்ளம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள  தனியார் தேயிலை, காபி  தோட்டங்களில் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ள பலாமரங்களில் அதிக அளவு பலாப்பழங்கள் விளைந்துள்ளன. இவற்றை  தின்பதற்காக சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைக்கூட்டம் இங்கு முகாமிட்டுள்ளது.

மாமரம் பகுதியில் இருந்து கோழிக்கரை செல்லும் சாலையில் காட்டு யானை ஒன்று வனப்பாதையில் உள்ள பலா மரத்தில் துதிக்கையால்  பலாப்பழத்தை பறித்து தின்றது. பலாப்பழத்தை யானை பறிக்கும் காட்சியை அந்த வழியே சென்ற ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது.பலா மரங்கள் அதிக அளவு குடியிருப்பு நிறைந்த பகுதிகளிலும் உள்ளது. இதனால் யானைகள் இவற்றை உன்பதற்காக அடிக்கடி குடியிருப்பு மற்றும் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வருகிறது.

எனவே இப்பகுதியில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டங்கள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.யானைக் கூட்டங்கள் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உலா வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

 இரவு நேரங்களில் கோத்தகிரி -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும் எனவும்‌, சாலைகளில் உலா வரும் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் சுற்றுலா பயணிகள்,இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: