நகராட்சி மீன் மார்க்கெட்டில் 70 கிலோ அழுகிய மீன்கள் அழிப்பு-உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

தர்மபுரி : தர்மபுரியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைத்திருந்த 70 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுலரமணன், மீன்வள ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர், தர்மபுரி டவுன் பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் ஒரு சில கடைகளில் அழுகிய நிலையில் இருந்த கட்லா, திலேப்பியா, ரூப்சந்த் உள்ளிட்ட ₹10 ஆயிரம் மதிப்பிலான 70 கிலோ மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். இதேபோல் சந்தைப்பேட்டை, குமாரசாமிபேட்டை, பென்னாகரம் ரோடு, நெடுஞ்சாலை மேம்பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்கடைகளிலும் சோதனை நடத்தினர்.

கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 சில்லரை விற்பனை கடைக்கு தலா ₹1000 வீதமும், ஒரு மொத்த விற்பனை கடைக்கு ₹2 ஆயிரம் என மொத்தம் ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘அழுகிய மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. மீன்களை நீண்ட நாட்கள் இருப்பு வைக்க கூடாது. மீன்களை பாதுகாக்கும் ஐஸ் பெட்டிகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். மீன்களை விற்பனைக்கு வெயிலில் வைக்க கூடாது. இது போன்ற ஆய்வுகள் அரூர், பென்னாகரம், ஒகேனக்கல் பகுதிகளில் தொடர்ச்சியாக நடத்தப்படும்,’ என்றனர்.

Related Stories: