ஊட்டி நகராட்சி மார்க்கெட்டை புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு -விரைவில் பணிகள் துவக்க திட்டம்

ஊட்டி : ஊட்டி நகராட்சி மார்க்கெட் முதற்கட்டமாக ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் விரைவில் துவக்கப்படவுள்ளது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் நகராட்சியின் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த நகராட்சி மார்க்கெட்டில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் பல கடைகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை.கடந்த நான்கு தலைமுறைகளாக இங்கு பலரும் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த மார்க்கெட் கட்டிடங்கள் பழமை வாய்ந்ததாக உள்ளது. மேலும், பார்க்கிங் தளம் மற்றும் இதர வசதிகள் இன்றி உள்ளது. எனவே, இந்த மார்க்கெட்டை மேம்படுத்த வேண்டும்.

கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக நகராட்சி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை துவக்க உள்ளது. முதற்கட்டமாக காபி அவுஸ் சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளை அகற்றப்பட்டு, அப்பகுதியில் புதிய கடைகள் கட்டப்படவுள்ளது. தரைதளத்தில் கடைகளும், மேல் தளத்தில் வாகனங்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்படடுள்ளது.

தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக, மார்க்கெட்டில் உள்ள அனைத்து கட்டிடங்களும் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது முதற்கட்ட பணிகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ.40 கோடி நகராட்சி நிர்வாகத்திடம் கோரியுள்ளது. இதன் மூலம் விரைவில் ஊட்டி நகராட்சி மார்க்கெட் கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும்.

மேலும், இந்த மார்க்கெட்ைட புதுப்பிப்பதன் மூலம் ஊட்டி நகரின் மையப்பகுதியில் மிகப் பெரிய பார்க்கிங் தளமும் கிடைக்கும். இதன் மூலம் ஊட்டி நகரில் நிலவி வரும் பார்க்கிங் பிரச்னைகளை களைய வாய்ப்புள்ளது. ஊட்டி நகராட்சி கமிஷ்னர் காந்திராஜன் கூறியதாவது: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் கட்டிடங்கள் மிகவும் பழமையானதாக உள்ளது. மேலும், பார்க்கிங் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது.

எனவே, இந்த மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் துவக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ரூ.6 கோடியில் கட்டுமான பணிகள் துவக்கப்பட உள்ளது.காபி அவுஸ் பகுதியில் உள்ள மார்க்கெட் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, அதே பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். இது போன்று கட்டப்படும் கட்டிடங்களின் முதல் தளம் பார்க்கிங் தளமாக மாற்றப்படும். இதன் மூலம் இங்கு ஏராளமான வாகனங்களையும் நிறுத்த முடியும். இதனால், ஊட்டி நகரில் நிலவி வந்த பார்க்கிங் பிரச்னைகள் களைய வாய்ப்புள்ளது, என்றார்.

Related Stories: