மயிலாடுதுறை அருகே வயலுக்கு தண்ணீர் விட மறுப்பு நெல் நாற்றை தலையில் சுமந்து கலெக்டரிடம் மனு கொடுத்த விவசாயி

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே வயலுக்கு தண்ணீர் விட மறுத்ததால் விவசாயி நெல் நாற்றை தலையில் சுமந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தங்குடி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் விவசாயி. இவர் மயிலாடுதுறை தாலுகா கங்கணபுத்தூர் ஊராட்சி தேவனூர் கிராமத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதால் இன்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சி நடவு செய்யும் பணிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது வயல் ஓரமாக இருந்த மரத்தை வெட்டியது தொடர்பாக இவருக்கும் அதே ஊரை சேர்ந்தவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை மே மாதம் திறக்கப்பட்டதால் ஆற்றில் தண்ணீரை நம்பி குறுவை சாகுபடி செய்வதற்காக நடராஜன் விதை விட்டு நாற்றுக்களை தயார் செய்துள்ளார். ஆனால் இன்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கடந்த மாதம் 15ம்தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் மெய்யநாதனிடம் மனு அளித்தார். உடனடியாக அமைச்சர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால் தற்பொது வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் நடவு செய்யமுடியாமல் 50 நாட்களுக்கு மேல் முற்றி காயத் தொடங்கிய நாற்றுகளை லோடு ஆட்டோவில் எடுத்து வந்தார். போலீசார் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் நாற்றுகளை தலையில் சுமந்துகொண்டு கலெக்டரை பார்க்க சென்றபோது போலீசார் தடுத்தனர்.

பின்னர், கூட்ட அரங்கிற்கு கலெக்டரிடம் மனுஅளிக்க போலீசார் அழைத்து சென்றனர். மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் மனுவை அளித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: