பொதுக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும்-மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ் நாடு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தினர் அளித்துள்ள மனு விவரம்: ஈரோட்டில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. ஆனால், அது முறையாகப் பராமரிக்கப்படாததால் காவிரி ஆற்றில் சாயம் மற்றும் இதரக்கழிவு நீர் கலக்கும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. மேலும், 200 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதில் தொழிற்சாலைக் கழிவுகளை செலுத்துவதால் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது.

இதன் காரணமாக ஈரோடு மாவட்ட மக்கள் கேன்சர் நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் பொது சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து, சாயக் கழிவு நீரையும், இதரக் கழிவு நீரையும் சுத்திகரித்து அதை மறு சுழற்சி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 புளிய மரங்கள் தீ வைத்து எரிப்பு: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மொடக்குறிச்சி தாலுகா கமிட்டி சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு:மொடக்குறிச்சி வட்டம், எழுமாத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட எல்லக்கடையில் இருந்து வடுகபட்டி செல்லும் சாலையில் உள்ள ஏணிப்பாளி பகுதியில் சாலையில் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானவற்றில் 15 மரங்களுக்கு தீ வைத்து எரித்து, பட்டுபோகும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தாசில்தார், நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே மரங்களை தீவைத்து எரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்தியூர் தாலுகா சென்னம்பட்டி அரிஜன காலனியைச் சேர்ந்த மாதேஸ் அளித்துள்ள மனு விவரம்: எனது இளைய மகள் உகானா, சென்னம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் தற்போது 1ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு ”சாதி-மதம் அற்றோர்” என சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலப்பணியை தொடங்க வலியுறுத்தல்: பெத்தாம்பாளையம், சூரியம்பாளையம் பகுதி மக்கள் அளித்துள்ள மனு விவரம்: எங்கள் ஊரில் கீழ்பவானி வாய்க்காலில் போக்குவரத்துக்காக ஆறு மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைத்து தரும்படி கோரிவிடுத்திருந்தோம். அதைத்தொடர்ந்து அந்தப் பணிக்கு பூஜை போடப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் இதுவரை பொதுப்பணித் துறையினர் பணியை தொடங்கவில்லை.இதுதொடர்பான ஆவணங்களை அமைச்சர் சு.முத்துசாமியிடம் சமர்ப்பித்தோம். ஆகஸ்ட் 15ம் தேதி பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்தால், பணிகள் தடைபடும்.

அதற்கு முன்னதாக பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.இந்த நிலையில், கடந்த வாரம் ஈரோட்டில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அதுகுறித்து அமைச்சர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நேரிலும் தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவேபணியை முடிக்குமாறு செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்கள் அளித்துள்ள மனு விவரம்: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சர பார்ப்பு முடித்து, 2013 முதல் இன்று வரை, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கடந்த 9 ஆண்டுகளாக நிரந்தர பணி வேண்டி காத்துள்ளோம். இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து சென்னையில், பள்ளி கல்வித்துறை வளாகத்தில் கடந்த, 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தொடர் உண்ணாவிரதம் இருந்தோம்.

முதல்வரின் தனி செயலளர், பள்ளி கல்வித்துறை ஆணையர் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது, எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு நீதிமன்றம் விதித்த தடைக்கு, இடைக்கால தடை பெற்று பணி நியமனத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் தகுதியான 30 ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கு நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள எங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு மதுவிற்பனை:  தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், பார் கட்டட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் அளித்துள்ள மனு விவரம்:ஈரோடு மாவட்ட டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் மேற்பார்வையாளர் அனுமதியுடன், மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 ரூபாய் முதல் ரூ. 50 வரை கூடுதலான விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால, ஏற்படும் கூடுதல் செலவால், வாடிக்கையாளர்கள் பாருக்குள் வராமல், வெளி இடங்கள், கடைகளில் மது அருந்திச் செல்கின்றனர். இதனால், பார் ஏலத்தில் எடுத்து நடத்துவோர் வருவாய் பாதிக்கப்பட்டு வருகிறது.இதுபோன்ற பிரச்னையால் பாரை நடத்த முடியாமல் தற்போது 100 பாருக்கு மட்டுமே அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர். கூடுதல் விலைக்கு மொத்தமாக மதுபாட்டில்களை வழங்குவதால், பார் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்காக பேருந்து வசதி :  தாளவாடி ஒன்றியம், கேர்மாளம், திங்களூர் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் அளித்துள்ள மனு விவரம்:தாளவாடி ஒன்றியம், திங்களூர், கேர்மாளம் ஊராட்சிப் பகுதிகளில் காடட்டி, சுஜில்கரை, கேர்மாளம் ஆகிய ஊர்களில்  3 அரசு உயர்நிலை பள்ளிகள் உள்ளன. கோட்டமாளம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி கடந்த கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

இப்பள்ளியில், திங்களூர், கேர்மாளம் பகுதியில் மட்டும் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.20 கி.மீ. துரத்தில் உள்ள கோட்டமாளம் மேல் நிலைப்பள்ளிக்கு உரிய நேரத்துக்குச் செல்ல பேருந்து வசதி இல்லை. எனவே தாளவாடி இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, ஆசனூருக்கு 6.45 மணிக்கும், கேர்மாளத்துக்கு 7.30 மணிக்கும் வந்து, பின்னர் கோட்டமாளத்துக்கு 8.30 மணிக்கு செல்லுமாறு பஸ் இயக்க வேண்டும்.

மறு மார்க்கமாக கோட்டமாளத்தில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு, 11.30 மணிக்கு தாளவாடி வந்து சேருமாறும், தாளவாடியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, ஆசனூருக்கு 2.45 மணி, கேர்மாளத்துக்கு 3.30 மணி, கோட்டமாளத்துக்கு மாலை 4.30 மணிக்கும் வந்து சேருமாறு பஸ் இயக்க வேண்டும். இதே போல மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு தாளவாடிக்கு சென்றடையுமாறு இயக்கினால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட மக்களும் பயனடைவர். எனவே, ரத்து செய்யப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: