விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வட மாநில வாலிபர் சடலம்-கொலையா? - போலீஸ் விசாரணை

விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரத்த காயங்களுடன் நேற்று காலை பிணமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் வாலிபரின் கையில் குத்தப்பட்டிருந்த பச்சை மற்றும் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த மணி பர்ஸ் ஆகியவற்றை வைத்து அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் கர்நாலை சேர்ந்த குமான் மகன் கிஷன்(20) என்பதும், இவர் விருத்தாசலம் இரட்டை தெருவில் தங்கிக் கொண்டு, தொழுதூர் அருகே ஆவட்டியில் தனது உறவினர் ஒருவர் வைத்திருக்கும் நகை அடகு கடையில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது. கிஷனின் தந்தை குமான் இந்திய ராணுவத்தில் பணி செய்து வருவதாகவும் தெரிகிறது. தொடர்ந்து அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பின்பு இதுகுறித்த புகாரின் பேரில் கிஷன் ஏன் இப்பகுதிக்கு வந்தார், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் கொண்டு வந்து போட்டுள்ளனரா? என்பது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: