சொத்தை அபகரித்து அடியாட்கள் மூலம் மிரட்டுவதாக புகார் ஒரே குடும்பத்தில் பெண்கள் உட்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி-வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வேலூர் : சொத்தை அபகரித்து அடியாட்கள் மூலம் தனிநபர் மிரட்டுவதாக கூறி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 8 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நேற்று நடந்தது. பொதுமக்களிடம் இருந்து மனுக்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பெற்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் அரங்கத்தின் நுழைவு வாயிலில் திடீரென ஒருவர் கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து ஊற்றிக்கொண்டு, அருகில் இருந்த பெண்கள் உட்பட 7 பேர் மீதும் ஊற்றிவிட்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடந்தினர்.

அதில், வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர், வெங்கடேசன்(60), தற்போது வக்கீலாக உள்ளார். இவரது சகோதரர்கள் பாபு, காமராஜ், முரளிதரன், பிரபு, பாபுவின் மனைவி மகேஸ்வரி, காமராஜின் மனைவி அருள்மொழி, முரளிதரனின் மனைவி சாந்தி, சகோதரி செல்வம். இவர்களுக்கு காந்திரோட்டில் 800 சதுர அடி காலிமனை உள்ளதாம். இந்த இடத்தை சேண்பாக்கத்தை சேர்ந்த தனிநபர் ஆக்கிரமித்துள்ளார்.

இதுதொடர்பாக, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தனிநபர் 20 அடியாட்களை வைத்து கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதும், தாக்கவும் முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து வடக்கு போலீஸ் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததும், வெங்கடேசன் மனுவுடன் சற்று தொலைவில் நின்றிருந்தபோது, பாபு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு அருகிலிருந்த குடும்பத்தினர் 7 பேர் மீதும் ஊற்றிவிட்டு தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது.

இதையறிந்த கலெக்டர் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினார். இதில், அவர்கள் எங்களுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிமிரத்துள்ளனர். மேலும், அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இருதரப்பினரும் அந்த இடத்தை பயன்படுத்தக்கூடாது. இதுதொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். கலெக்டர் அலுவலகத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆயுதப்படை போலீசார் சோதனைக்கு கோரிக்கை

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைத்தீர்வு கூடத்தில் பொதுமக்களை சோதனை செய்ய பல ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர். ஆனால் ஓரிரு மாதங்களுக்கு முன்பு அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தற்போது, உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்தளவு போலீசார் இப்பணியில் ஈடுபடுவதால் சரியாக சோதனை செய்ய முடியவில்லை. எனவே மீண்டும் ஆயுதப்படை போலீசாரை நியமித்து சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: