நெல்லை, தென்காசியில் பருவமழை தொடக்கம் சேர்வலாறு நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது-பலத்த காற்றும் நீடிப்பு

நெல்லை : நெல் லை,தென்காசி மாவட்டங்களில் காற்று பலமாக வீசும் நிலையில்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. சேர்வலாறு அணை நீர் இருப்பு ஒரே நாளில் 7 அடி  உயர்ந்துள்ளது.நெல்லை,  தென்காசி மாவட்டங்களில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜுன் 1ம் தேதி தொடங்கும். ஆனால், நடப்பு ஆண்டில் ஜூன் முதல் வாரத்தில் ஓரிரு நாட்கள்  மட்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. அதன் பின்னர்  மழை ஏமாற்றம் அளித்தது. தொடர்ந்து வெயில் அடித்த நிலையில் ஜூன் மாத இறுதி வாரத்தில்  இருந்து மீண்டும் காற்று பலமாக வீசத் தொடங்கியது. இதையடுத்து கடந்த 3ம் முதல்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில்  மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

கடந்த 3 தினங்களாக  குற்றாலம் மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து  அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை முதல் அபாய அளவில் நீர்  கொட்டியதால் ஐந்தருவி, பிரதான அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் நெல்லை மாவட்ட அணைகளின்  நீர்பிடிப்பு பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக  மிதமான மழை பெய்துள்ளது.

சிலபகுதிகளில்  விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. அடவிநயினார் அணைபகுதியில் 16 மில்லி  மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குண்டாறு, சிவகிரியில் தலா 6 மிமீ மழை  பெய்தது. செங்கோட்டை, தென்காசியில் தலா 3 மிமீயும், கடனா, ஆய்க்குடி  பகுதியில் தலா 2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

இதனால் பாபநாசம் அணையில் 50.70 அடியில் இருந்த நீர்மட்டம் நேற்று 52.90 அடியாக 2 அடி உயர்ந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு அணைக்கு நீர்வரத்து 667.25 கனஅடியாக இருந்தது. இது நேற்று வினாடிக்கு ஆயிரத்து 881.45 கனஅடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து 704.75 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம்  64.47 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர் இருப்பு மேலும் 7 அடி உயர்ந்து  71.19 அடியானது. மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 76.60 அடியாக உள்ளது.  அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு நீர்  இருப்பு 19 அடியாக உள்ளது. கொடுமுடியாறு நீர் இருப்பு 43.50 அடியாக  உள்ளது.

தென்காசி மாவட்டம் குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் 7  கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி நீர் இருப்பு 60 அடியாக உள்ளது.  கருப்பாநதி நீர் இருப்பு 28.54 அடியாக உள்ளது. கடனா அணை நீர் இருப்பு 42  அடியாகும். அடவிநயினார் அணையில் 52.50 அடிநீர் இருப்பில் உள்ளது. இதனிடையே  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்றும் பகலில் பலத்த காற்று வீசியது.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்றும் சிலபகுதிகளில்  அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால்  இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: